முழு ஊரடங்கு எதிரொலியாக தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் கோயில்களுக்கு வெளியே திருமணங்கள் நடைபெற்றன.
கொரோனா பரவல் எதிரொலியாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றும் பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
அதுபோன்று இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால், ஏற்கனவே தேதி குறிப்பிட்டிருந்தபடி இன்று பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றன. திருமணங்களுக்குச் செல்வோர்கள் பத்திரிகைகள் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் கோயில்களில் வார இறுதி நாள்களில் பக்தர்களுக்கு தடை எதிரொலியாக மூடப்பட்டிருப்பதால் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன. குறிப்பாகக் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தேவநாதசுவாமி கோயில் வாசலில் பல திருமணங்கள் இன்று நடைபெற்றன.
இங்கு ஒவ்வொரு முகூர்த்த தினத்திலும் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். ஆனால் இன்று ஏறத்தாழ 50 திருமணங்கள் மட்டுமே நடைபெற்றன. இக்கோயிலில் திருமணம் நடந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் புதுமாப்பிள்ளைகள் மணப்பெண்களுக்குக் கோயிலின் சாலையிலும், வாசலிலும் தாலி கட்டியதைக் காண முடிந்தது.
மேளதாளங்கள் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது. குறிப்பிட்ட அளவிலான உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருப்பவர்கள் வீடியோ கால் மூலம் திருமணத்தில் கலந்துகொண்டு ஆசிர்வதித்ததையும் காணமுடிந்தது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வாசலிலும் இன்று திருமணங்கள் நடைபெற்றன. திருத்தணி கோயிலிலும் இன்று திருமணங்கள் நடைபெற்றன. ஆனால் இங்கு ஏற்கனவே அனுமதி வாங்கப்பட்டவர்களுக்கு கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு கோயிலின் உள்ளே தாலி கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
அதே சமயத்தில் ஊரடங்கு எதிரொலியாகச் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
**-பிரியா**
�,