�தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர். இதனால், இருவரும் தங்களின் மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை நடத்தக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி. வில்சன் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திராவை நேற்று மாலை சந்தித்து மனுவொன்றை அளித்தனர்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கும் குஜராத்தில் நடத்தப்பட்டதுபோல், தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,