திமுக எம்பிக்களின் கூட்டம் இன்று (நவம்பர் 21) அக்கட்சியின் தலைமையகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, கொறடா ஆ.ராசா மற்றும் எம்பிக்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடியதில் உயிர் நீத்த 750 விவசாயிகளுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், “ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடும் குளிரிலும், அடக்குமுறையிலும் துணிச்சலாக நின்று போராடி – அச்சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமர் அறிவிப்பிற்குப் பின்னணியாக இருக்கும் உயிர் தியாகம் செய்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்”என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்ததாக குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“குறைந்த பட்ச ஆதார விலையே இல்லாத மூன்று வேளாண் சட்டங்களை முதலில் அவசரச் சட்டங்களாகவும், பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் கொண்டு வந்தபோது தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார் திமுக தலைவர். தொடர்ந்து எதிர்த்து – மாநிலத்தில் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களில் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்திற்கு துவக்கத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். வேளாண் சட்டங்களை எதிர்த்து வாக்களித்ததோடு மட்டுமின்றி சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மறுநாளே 23.9.2020 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு – தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் அறிவித்தது திமுக” என்று வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக நடத்திய போராட்டங்களை நினைவுகூர்ந்த இந்தக் கூட்டம், .
“தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 28.8.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சரே தீர்மானத்தை முன்மொழிந்து “மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக” என வலியுறுத்தும் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.
வழக்குகள், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி, போராட்டத்திற்குள் காரை விட்டு கொன்றது என தங்கள் போராட்டத்தை நோக்கி வந்த அனைத்து அராஜாகத்தையும் – கண் மூடித்தனமான அடக்குமுறைகளையும் – முள் வேலிகளையும் – தைரியமாக எதிர்த்து நின்று – இந்திய விவசாயப் பெருங்குடி மக்கள் “அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு” பின்னால் நின்று, அவர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு திமுக தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. அந்த ஆதரவு எதிர்கட்சியாக இருந்த போதும் – ஆளுங்கட்சியான பிறகும் தொடர்ந்தது.
இந்நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக மவுனம் சாதித்த பிரதமர் அவர்களுக்கு விவசாயிகளின் பலத்தை உணர்த்தி – இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எதிரான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவது என்ற பிரதமரின் அறிவிப்பினை அறவழிப் போராட்டம் மூலம் வெளியிட வைத்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இந்தக் கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. அறிவிப்பினை முன்னெடுத்துச் சென்று, நாடாளுமன்றத்தின் வருகின்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை – சட்டமாக நிறைவேற்றிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்றும் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
**-வேந்தன்**
�,