மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் விரைவில் நடக்க இருப்பதாக அக்கட்சிக்குள் வேகமாக தகவல்கள் பரவி வருகின்றன. எடப்பாடி மூன்று வருடமாக தொடர்ந்து முதல்வராக நீடித்துக் கொண்டிருக்கிறார். இதுநாள் வரை கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் பெரிய அளவு அதிரடி மாற்றங்களை செய்யத் தயங்கிய எடப்பாடி சமீப காலமாகவே அந்த நிலையில் இருந்து மாறிவிட்டார். அண்மையில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி மெல்ல மெல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் எடப்பாடி, மேலும் சில மாவட்டச் செயலாளர்களையும் மாற்றியமைக்கும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த சூழலில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அதிமுக அரசின் பல்வேறு அதிகார மையங்களையும் முற்றுகையிட்டு காய் நகர்த்தி வருகிறார்கள். ஏற்கனவே ஜெயலலிதா காலத்தில் சசிகலாவும், அவரது குடும்பமும் அதிகார மையமாக இருந்தனர். ஆனால் இப்போது யார் அதிகார மையம் என்ற கேள்வி எழுகிறது.
அதற்கு கடந்த 23, 24 தேதிகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மேற்கொண்ட அதிரடிப் பயணமே பதில் என்கிறார்கள் அதிமுகவினர். தனது அதிரடியான செயல்பாடுகளால் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் பதவியில் தொடர்ந்து வருகிறார். அவருக்கு பதிலாக வேறு யாரும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படாத நிலையில் அப்பதவியை மீண்டும் தானே பெற கடுமையான முயற்சியில் இருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. ஊரடங்கு காரணமாக கட்சி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்த ஓ.பன்னீரும், எடப்பாடியும் இந்த ஒரு வாரமாகவே கட்சி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அடுத்து மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் விரைவில் வரலாம் என்ற நிலையில்தான் கடந்த மே 23 , 24 தேதிகளில் அவசரமாக குமரி, சேலம், கோவை என அவசரப் பயணம் செய்திருக்கிறார்.
மே 23 ஆம்தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்த நேரம். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காரில் குமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியில் உள்ள தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரத்தின் வீட்டுக்குப் போயிருக்கிறார். முதல்வரால், ‘அண்ணன்’ என்று அழைக்கப்படுகிறவர் தளவாய் சுந்தரம். பல விஷயங்களில் முதல்வருக்கு பக்க பலமாக இருப்பவர். இந்த நிலையில் அவரை சந்தித்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த ராஜேந்திரபாலாஜி, குமரி மாவட்டச் செயலாளர் அசோகன், தளவாய் சுந்தரத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரையும் சந்தித்தார். தன் மீது எடப்பாடி பழனிசாமி கோபமாக இருப்பது பற்றி தளவாய் சுந்தரத்திடம் ராஜேந்திரபாலாஜி பேசியதாகச் சொல்கிறார்கள். அதையடுத்து அங்கிருந்து சேலம் புறப்பட்டிருக்கிறார்.
அன்று இரவு ஒன்பது மணிக்கு முன்னதாக சேலம் வந்துவிட்டவர் நெடுஞ்சாலை நகரில் முதல்வரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின் முதல்வர் எடப்பாடியைப் பார்த்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. தனது நிலைமையை சில நிமிடங்களில் விளக்க, ‘பாத்துக்கலாம் போயிட்டு வாங்க’ என்று பதில் சொல்லியனுப்பிவிட்டார் முதல்வர்.
அத்தோடு நில்லாத ராஜேந்திரபாலாஜி அமைச்சர் வேலுமணி கோவையில் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு இரவே கோவை புறப்பட்டிருக்கிறார். அங்கே தங்கி ஓய்வெடுத்துவிட்டு 24 ஆம் தேதி காலை வேலுமணியிடம் பேசியிருக்கிறார். ‘உங்களைப் பார்க்கத்தான் கோவை வந்திருக்கிறேன்’ என்று சொல்ல ஆச்சரியப்பட்டுப் போனார் வேலுமணி. ஏனெனில் ஏற்கனவே முதல்வர், வேலுமணி, தங்கமணி போன்றவர்களை ராஜேந்திரபாலாஜி தாக்கிப் பேசியதாக அவருக்குத் தகவல்கள் சென்றிருந்தன. இந்நிலையில் தான் நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பிசியாக இருப்பதாக சொல்லியுள்ளார் வேலுமணி. ‘நீங்க எங்க இருக்கீங்களோ அங்க வர்றேன்’ என்று சொல்லிவிட்டு குளத்துப்பாளையம் பகுதியில் வேலுமணி பொருட்கள் வழங்கிக் கொண்டிருந்த நிலையில் அங்கேயே சென்றுவிட்டார் ராஜேந்திரபாலாஜி. இவ்வளவு தூரம் வந்திருக்கிறாரே என்று யோசித்த வேலுமணி, ‘நீங்களும் உதவிப் பொருட்களைக் கொடுங்க’ என்று ராஜேந்திரபாலாஜியையும் தன்னோடு சேர்ந்து கொடுக்கச் செய்திருக்கிறார். அப்போது வேலுமணியிடம் சில விஷயங்களை மனம் திறந்து பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.
ஆக தான் இழந்த மாவட்டச் செயலாளர் பதவியை மீட்கவும், அமைச்சர் பதவியைக் காப்பாற்றவும் தளவாய் சுந்தரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி ஆகியோரை ஒரே மூச்சில் பயணித்து சமாதானப் படலம் நடத்தச் சந்தித்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. இவர்கள் போதாதென்று டெல்லி மூலமாகவும் முயற்சித்து வருகிறாராம். இப்படியெல்லாம் சமாதான சந்திப்புகள் நடத்தியிருக்கும் ராஜேந்திரபாலாஜி இந்த வரிசையில் ஓ.பன்னீரை சந்திக்கவில்லை. அவருக்கு இவர் மீது கோபம் ஏதும் இல்லையோ என்னவோ” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.�,”