மும்பையில் போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து அதிகரித்துள்ளதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் கூறிய விவகாரம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை, மும்பை போன்ற மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கஷ்டப்படுகின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் குடும்பங்களில் விரிசலை கொண்டுவருகிறது என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரின் மனைவி கூறியது பேசு பொருளாகியுள்ளது.
இன்று(பிப்ரவரி 5) செய்தியாளர்களை சந்தித்த அம்ருதா ஃபட்னாவிஸ், ”நான் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி என்பதை மறந்துவிடுங்கள். ஒரு பெண்ணாகவும்,குடிமகனாகவும் சொல்கிறேன். வீட்டை விட்டு வெளியே வரும்போது சாலைகளில் உள்ள பள்ளம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பலமுறை அனுபவித்திருக்கிறேன். போக்குவரத்து நெரிசலில் அதிகநேரம் மாட்டிக் கொள்வதால், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரத்தை செலவிட முடியவில்லை. அதனால், 3 சதவிகித விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது.
மும்பையில் இதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன. அங்கு அரசு கவனம் செலுத்தவில்லை. இதில் எல்லாம் கவனம் செலுத்துவதை தவிர்த்து பாக்கெட்டை நிரப்புவதில்தான் அரசின் கவனம் உள்ளது” என்று கூறினார்.
இவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் மீம்ஸூக்கு வழிவகுத்து கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அம்ருதா ஃபட்னாவிஸின் கூற்றை விமர்சித்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர்,”போக்குவரத்து நெரிசல் விவாகரத்துக்கு இட்டுச் செல்கிறது என்ற அவரது குற்றச்சாட்டு வியக்க வைக்கிறது. விவாகரத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இதை நான் முதல்முறையாகக் கேள்விபடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி ட்விட்டரில், “சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 3% மும்பைவாசிகள் விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறும் பெண்ணுக்கு இந்த நாளின் சிறந்த (இல்) லாஜிக் விருது வழங்கப்படுகிறது. தயவு செய்து பிரேக் போடுவதை விட விடுமுறை எடுங்கள். பெங்களூரு மக்கள் தயவு செய்து இதைப் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உங்கள் திருமண வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று விமர்சித்துள்ளார்.
**-வினிதா**