முதல்வரை வேந்தராகக் கொண்டு தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மருத்துவ முறைகளான தனி சித்த மருத்துவ பல்கலைக் கழகம் தமிழகத்தில் தொடங்குவதற்கான சட்ட மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அதில் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகள் வளமான பாரம்பரியம் மற்றும் இலக்கியங்களைக் கொண்டுள்ளன. சித்த மருத்துவம் மற்றும் பிற பாரம்பரிய முறை மருந்துகளில் அறிவியல் முறை மதிப்பீடானது அதன் நன்மைகள் மனித இனம் முழுவதற்கும் சென்றடையும் வகையில் மேலும் ஆராய்ச்சி செய்வது தேவையாகிறது.
எனவே சித்த மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவம் ஹோமியோபதியின் முறைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய முக்கியத்துவம் அளித்து மேம்படுத்துவதற்காகத் தனி சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ அரசு கருதுகிறது.
அதன்படி தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையைப் போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளான சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்கப்படும் எனக் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக் கழகத்தைத் தவிரப் பிற அனைத்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்துவரும் நிலையில் புதிதாகத் தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார்.
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்துக்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்புச் சட்டங்கள் அனைத்தையும் வழங்குவார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள் யுனானி, யோகா, மற்றும் இயற்கை மருத்துவம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதா சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே துணைவேந்தர் நியமனங்களைத் தமிழக அரசு நியமிக்கும் வகையிலான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவும் சட்டத்துறைக்கு அனுப்பிய பின்னர் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
**-பிரியா**