மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Published On:

| By Balaji

மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முதுகலை மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது, மொத்த இடங்களில் 50 சதவீதம் இடங்கள் கிராமங்களில் தொலைதூர பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.இதுதொடர்பாக தனியார் மருத்துவர்கள் சார்பிலும், அரசு மருத்துவ அலுவலர் சங்கம் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. இத்தகைய சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது தனியார் மருத்துவர்களும், அரசு மருத்துவர்களுக்கும் இடையே வேற்றுமையை, பாகுபாட்டை ஊக்குவிப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வாதத்தில், “இதுபோன்ற சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவது எல்லாம் இந்திய மருத்துவ கவுன்சிலின் அதிகாரத்துக்கு உட்பட்டது. தனிப்பட்ட முறையில் மாநில அரசுகள் இதனை செய்ய முடியாது” என்று தெரிவித்தது. வழக்கு விசாரணை கடந்த மாதம் முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இவ்வழக்கில் இன்று (ஆகஸ்ட் 31) தீர்ப்பு வழங்கிய அருண் மிஸ்ரா அமர்வு, “மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளைப் பொறுத்தவரை, சேவை மருத்துவ அதிகாரிகளுக்கு இட ஒதுக்கீடு தரும் விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை” என்று உத்தரவிட்டது. அத்துடன், மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

எனினும் இதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட மருத்துவர்கள் 5 ஆண்டுகள் கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் கட்டாயமாக பணி செய்திருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் தான் அவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share