மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2 ஆவது கட்ட அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று (மார்ச் 8) காலை கூடியது.
ஏப்ரல் 8ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு மாநிலங்களவை காலை நேர அமர்விலும், மக்களவை மாலையும் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் பாதிப்பு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை, மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கு அதிகமாகவும், டீசல் விலை லிட்டருக்கு 80 ரூபாய்க்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது. கலால் வரி / செஸ் வரியாக ரூ .21 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் உட்பட நாடு முழுவதுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
அதுபோன்று எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கேட்டு எதிர்க்கட்சிகள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு. “முதல் நாளிலேயே நான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்திய நிலையில், அவை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
**-பிரியா**
�,