தேசியத்துக்கு அப்பால் அரசியல்: காந்தி, பெரியார், அண்ணா

politics

ராஜன் குறை

இந்த வார இறுதியில் காந்தி ஜெயந்தி எனப்படும் காந்தியின் 152ஆவது பிறந்த தினம் வருகிறது. காந்தியை தேசப்பிதா என்று அழைத்துப் பழகியுள்ளோம். இந்திய தேசத்தை உருவாக்கியதில், அதன் விடுதலையை உறுதி செய்ததில், அதன் அரசியலை வடிவமைத்ததில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், காந்தியின் சிறப்பம்சம் அவர் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க நினைத்தார் என்பதல்ல. அந்த அரசியல் விடுதலை என்ற பரிமாணத்தைக் கடந்து அவர் வெகுமக்கள் வாழ்வை மேம்படுத்த நினைத்தார். எளிய மக்களை ஆதிக்கத்தின் நுகத்தடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அதை முரண் அரசியலாகச் செய்யாமல், அனைவரையும் அந்த லட்சியத்தை நோக்கி கூட்டு முயற்சியாகச் செயல்பட வைப்பதன் மூலம் செய்ய வேண்டும் எனக் கனவு கண்டார் எனலாம். காந்தியின் லட்சியவாத சிந்தனைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அந்த விமர்சனங்கள் முக்கியமானவை. ஆனால், அவர் சிந்தனைகள் அவசியம் தொடர்ந்து பயிலப்பட வேண்டியவை. ஏனெனில் அவர் இந்திய தேசியம் என்ற எல்லைக்குள் மட்டும் சிந்திக்கவில்லை.

காந்தி தொழிற்புரட்சி, முதலீட்டிய நவீன சமூகம், நுகர்வு கலாச்சாரம் போன்றவற்றை ஏற்கவில்லை. அந்த விதத்தில் அவர் முதலீட்டிய மறுப்பாளராக இருந்தார். அதே சமயம் அவர் பொதுவுடமை என்ற வடிவத்தையும் ஏற்கவில்லை. அது மொத்தத்துவ அரசை உருவாக்கும் என்பதால் அதுவும் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் கணிசமான சுயாட்சியுள்ள கிராம சமூகங்கள் என்பது போல லட்சியவாத நோக்கில் சிந்தித்தார். ஆனால், அதன் மையத்தில் அதிகார பரவலையும், சுயாட்சி என்ற கருத்தாக்கத்தையும் வைத்திருந்தார். அவர் மரபார்ந்த சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களே சமூகத்தை இயக்க உதவியாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் சனாதன நோக்கிலான பார்வையை அவர் மரபாக ஏற்கவில்லை. மரபின் ஆரோக்கியமான கூறுகளிலிருந்து பகிர்தலும், கருணையும், ஒத்திசைவும் மிக்க சமூகத்தை புனரமைக்கலாம் என்று நம்பினார்.

அவருடைய மரபுவாத நோக்கின் காரணமாக அவர் ஜாதீய சமூகத்தை அம்பேத்கரைப் போலவும், பெரியாரைப் போலவும் கடுமையாக விமர்சிக்கவில்லை. ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை ஆகியவற்றை களைந்துவிட்டால் ஜாதி சமூகம், அதன் வேலைப்பிரிவினை தவறல்ல என்றெல்லாம்கூட சிந்தித்தார். அவருடைய சற்றேறக்குறைய ஐம்பதாண்டுக் கால அரசியல் வாழ்க்கையில் அவர் சிந்தனைகள் பல மாற்றம் பெற்றுள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து ஆராய்ந்து பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக சிலவற்றைக் கூறலாம். அவர் சனாதன இந்துமத, பார்ப்பனீய பார்வைகளை முழுமையாக ஏற்கவில்லை. அதைவிட முக்கியமாக இந்துமத அடையாளவாத அரசியலை, தேசியத்தை ஏற்கவில்லை. மத நல்லிணக்கத்தை நம்பினார். “ஈஸ்வர் அல்லா தேரோ நாம்” என்ற பாடல் வரியை நாடெங்கும் கொண்டு சென்றார். அவர் முதலீட்டிய உற்பத்தி முறையை, நுகர்வு கலாச்சாரத்தை, அது ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்கவில்லை. சமூகத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தும் மொத்தத்துவ அரசு வடிவத்தையும் ஏற்கவில்லை. இதையெல்லாம் இணைத்து சிந்தித்தால் காந்தியின் அரசியல் என்பது பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து இறையாண்மையை இந்திய அதிகார வர்க்கத்துக்கு மாற்றும் தேசிய அரசியல் மட்டுமல்ல என்பதை உணரலாம். ஆனால், அவர் அத்தகைய அதிகார மாற்றத்தினால் உட்செரிக்கப்பட்டார். அது நிகழ்ந்த பின் பார்ப்பனீய இந்துத்துவ தேசியவாதிகளால் கொல்லப்பட்டார்.

**பெரியாரும் காந்தியும் **

இரண்டாண்டுகளுக்கு முன்னால் பெரியாரும் காந்தியும் குறித்து மின்னம்பலத்தில் எழுதும்போது அந்தக் கட்டுரைக்கு “பெரியாரின் காந்தி தேசம்” எனப் பெயரிட்டிருந்தேன். காந்தி இறந்த பிறகு பெரியார், இந்தியாவுக்கு காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும் எனக் கூறியது புகழ்பெற்றது. காந்தியை மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தவர் பெரியார். புனே ஒப்பந்தத்தில் அம்பேத்கர், காந்தியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கூறியவர். அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு பார்வையையும், இந்து மத எதிர்ப்பின் அவசியத்தையும் முழுவதும் ஆதரித்தவர். முக்கியமாக, காந்தி கொண்டாடிய ராமர் என்ற லட்சிய உருவகத்தை பெரியார் தீவிரமாக மறுதலித்தவர். ராமாயணத்தையும், ராமர் படத்தையும் கொளுத்தும் போராட்டங்களை அறிவித்தவர். அப்படிப்பட்ட பெரியார் வெறும் உணர்ச்சிகளின் காரணமாக காந்தி மரணமடைந்ததும் அப்படிப் பேசினார் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

அடிப்படையில் காந்தியும் சரி, பெரியாரும் சரி… மக்கள் விழிப்புணர்வு பெற்று சுயாட்சிக்கான ஆற்றலைப் பெறுவதைக் குறித்தே சிந்தித்தார்கள். இருவருமே அனைத்து மக்களுக்குமான தன்மானம், சுயமரியாதை என்று சிந்தித்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுதான் மிக முக்கியமானது. அதாவது அரசியலின் அச்சு என்பது ஒரு நபரின் சுய உருவாக்கத்தில், அதற்குக் கிடைக்கும் சமூகவெளி நீதியில், மரியாதையில் இருக்கிறது என்று எண்ணினார்கள். காந்தி அதை மரபுவாதியாகச் சிந்தித்தார். பெரியார் அதை புரட்சிவாதியாகச் சிந்தித்தார். இந்த வேறுபாடுகள் முக்கியமானவை. ஆனால், அவர்கள் இருவருமே தேசிய இறையாண்மையை மட்டுமே லட்சியமாகக் கொண்டு இயங்கவில்லை என்பதும் மிக முக்கியமானது.

இன்றைய சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் இளைஞர்கள் தேசிய அடையாளவாதம், குறுகிய இனவாத இறையாண்மைக் கனவு ஆகியவற்றை நோக்கி ஈர்க்கும் முயற்சிகள் நடந்துவரும் நாளில் நாம் காந்தியையும் பெரியாரையும் இணைக்கும் புள்ளிகளை மறப்பது ஆபத்தானது. மக்களின் உரிமைகள், அவர்கள் வாழ்வு மேம்படுவதுதான் முக்கியமான அரசியலே தவிர, அடையாளவாதம் பேசுவதும், பிற அடையாளங்கள் மீது வெறுப்பை வளர்ப்பதும், வன்முறையைக் கொண்டாடுவதும் அல்ல. மக்களின் மனமாற்றமே அரசியல் என்பதை அறிந்த காந்தியும், பெரியாரும் வன்முறையை அறவே தவிர்த்தனர். பெரியார் பிம்பங்களையும், குறியீடுகளையும் எரித்தாரே தவிர, பொதுச் சொத்துகளை நாசம் செய்வதை காலித்தனமென்றே கண்டித்து வந்துள்ளார். அவர் என்றுமே அத்தகையை நடவடிக்கைகளை நம்பியதில்லை.

பெரியார் பார்ப்பனர்களை வெறுத்தார், வெறுப்பைத் தூண்டினார் என்று நவபார்ப்பனீய விஷக்கொடுக்குகளும், இந்துத்துவர்களும் பொய்யைப் பரப்பி வரும் நேரத்தில் நேற்று அவருடைய அருமையான மேற்கோள் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதாக தெரிகிறது. பெரியாரிய ஆய்வாளரும், நண்பருமான சுபகுணராஜனும் அதைப் பகிர்ந்திருந்தார். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவை பார்ப்பனர்களுக்கு சடங்குகளில் வரும் வைதீக வருமானத்தைக் குறைத்து வருவதால் அவர்கள் அந்த புரோகித தொழிலைக் கைவிட்டு கல்வி, வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டு பணக்காரர்களாக மாறி வருகிறார்களே என்று பெரியாரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு பெரியார் பார்ப்பனர்கள் பணக்காரர்களாக இருப்பதில் எனக்கு பிரச்சினையில்லை; அவர்கள் மேல் ஜாதியினராக, பிறப்பால் பிறரைவிட உயர்ந்தவர்கள் என்று இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறுகிறார். குடியரசு பத்திரிகையில் 1946 நவம்பர் 9 அன்று வெளியான கட்டுரையில் அவர் கூறுவது: “திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து – ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது. அவன் நல்வாழ்வு வாழக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் சண்முகம் செட்டியார், சர் ராமசாமி முதலியார் போன்றவர்களாக, கோடீஸ்வரனாகவும், லட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே. எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால். எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான்.”

**அண்ணாவும் காந்தியும்**

காந்தியின் அரசியல் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றிய, அவருடைய அரசியல் நோக்கை வெளிப்படுத்திய நூல் இந்து சுயராஜ்யம் என்ற நூலாகும். இதை 1909ஆம் ஆண்டு குஜராத்தி மொழியிலும், 1910ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் எழுதினார். காங்கிரஸில் பிரிட்டாஷுருடன் ஒத்துழைத்து அவர்களிடம் ஆட்சி செய்யும் அதிகாரங்களைக் கோரிப் பெற்று மெள்ள மெள்ள சுயாட்சி நோக்கி செல்லலாம் என்று நினைத்தவர்கள் மிதவாதிகள் எனப்பட்டார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்து உடனே பூரண சுதந்திரத்தை அடைய வேண்டும் என்று நினைத்தவர்கள் தீவிரவாதிகள் எனப்பட்டார்கள். காந்தி இருவருக்கும் இடையே புகுந்து சுயராஜ்யம் என்றால் என்ன என்பதற்கு தனது புதிய வரையறையை முன்வைத்தார். அது என்னவென்றால் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருப்பதோ, அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பதோகூட பிரச்சினையில்லை; ஆனால் இந்திய வாழ்க்கை முறையை ஆங்கிலேயர்களுடைய வாழ்க்கை முறையாக மாற்றக் கூடாது என்பதுதான் சுயராஜ்யம் என்ற கருத்தாகும். அதாவது சுயராஜ்யம் என்பதை ஒரு மக்கள் தொகுதி அவர்கள் பண்பாட்டுக்கேற்ப வாழ்வதுதான் என்பதே காந்தியின் கருத்தாகும். இதில் நம்மவர், அந்நியர் என்ற பேச்சுக்கு இடமில்லை. ஆங்கிலேயர்கள் அந்நியர்கள் என்பதோ, வேறு மதத்தவர்கள் என்பதோ பிரச்சினையில்லை. அவர்கள் வேறொரு வாழ்க்கை முறையை, பண்பாட்டை நம்மீது திணிக்கிறார்கள் என்பதுகூட பிரச்சினையில்லை; அப்படி அவர்கள் திணிக்கும் வாழ்க்கை முறை, பண்பாடு ஆரோக்கியமானதல்ல, மானுடத்துக்கே கெடுதி பயப்பது என்பதுதான் பிரச்சினை என்று வாதிட்டார் காந்தி. இந்த வாதத்தில் சுயாட்சி என்பது ஒரு மக்கள் தொகுதி அவர்கள் விரும்பும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதுதான் என்றாகிறது. யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதோ, இன, மொழி, மத அடையாளங்களோ பிரச்சினையில்லை.

இது போன்ற ஒரு பார்வையை அண்ணாவின் ஆரிய மாயை நூலிலும் காணலாம். அவர் ஆரியர்கள் உருவாக்கியுள்ள வர்ண/ஜாதி தர்மம், அவர்களது தர்ம சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கை முறை அவையெல்லாம் தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். தமிழரிடையே ஜாதி ஏற்றத்தாழ்வை, பார்ப்பனீய கலாச்சாரத்தை புகுத்தியது ஆரியர்கள்தான்; தமிழ் மன்னர்கள் அவர்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள அதற்கு அனுமதித்தனர்; அதுதான் பிரச்சினை என்று கூறுகிறார். அதனால் ஆரியர்கள் என்று அடையாளப்படும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்பதோ, அவர்களும் பிறருக்கு உரிய அனைத்து உரிமைகளுடன் இருக்கக் கூடாது என்பதோ அல்ல. அவர்களும் திராவிடப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவசியம் என்று சுட்டிக்காட்டுகிறார் அண்ணா. ஆரிய மாயை என்பதே தமிழில், தமிழர்கள் வாழ்வில் கலந்துவிட்ட ஆரிய ஜாதீய பண்பாட்டுக்கூறுகள்தான். அதைத்தான் விலக்க வேண்டும் என்று கூறுகிறார் அண்ணா.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை கட்சியை துவங்கும்போது திராவிடர் என்ற மக்கள் தொகுதியைக் குறிக்கும் வார்த்தையை திராவிட என்ற பிரதேசத்தைக் குறிக்கும் வார்த்தையாக மாற்றுகிறார். வட இந்தியா ஆரிய கருத்தியலையும், இந்தி மொழியையும் திணிப்பதால் திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்தியா ஒரு தனி கூட்டாட்சி குடியரசாக விளங்க வேண்டும் என்பதுதான் அந்தக் கட்சியின் இலக்கு. அதைகூட திராவிட விடுதலை கழகம் என்று கூறாமல் திராவிட முன்னேற்றக் கழகம் என்றுதான் பெயரிடுகிறார்கள். ஏனெனில் மக்கள் அனைவர் வாழ்வும் மேம்படுவதும், ஜாதி இழிவு நீங்குவதும், சமூகநீதி தழைப்பதும்தான் முக்கியமே தவிர, தேசிய சொல்லாடலை உருவாக்குவதோ, இறையாண்மையுள்ள தேசமே லட்சியம் என்று பேசுவதோ அல்ல. சுயாட்சி என்பது மக்களை மையப்படுத்தியதாக, அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் தளைகளிலிருந்து விடுபடுவதாக இருப்பதுதான் அரசியல். அதனால்தான் மக்களாட்சி அரசியலை மேம்படுத்த திராவிட நாடு கொள்கையை கைவிடவும் திமுக தயங்கவில்லை; அதை மாநில சுயாட்சி கொள்கையாக மறுவரையறை செய்துகொண்டு இன்றுவரை இந்திய ஒன்றியத்தில் கூட்டாட்சி தத்துவத்தின் குரலாக ஒலித்து வருகிறது. அதன் அரசியல் தெளிவு அதற்கு வரலாற்றில் வெற்றியையே ஈட்டித் தரும்.

சுருங்கச்சொன்னால் தேசியம், தேசத்தின் விடுதலை என்பது அருவமான சொல்லாடல்; எப்போதுமே ஆதிக்க சக்திகளும் பிற்போக்கு சக்திகளும் இதைப் பேசும். மக்களின் விடுதலை, உரிமைகள், சமூகநீதி என்பதே தூலமான, உண்மையான சொல்லாடல். முற்போக்காளர்கள் இதைத்தான் பேசுவார்கள்.

**கட்டுரையாளர் குறிப்பு:**

**ராஜன் குறை கிருஷ்ணன் -** பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

.

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *