2022இல் நடைபெறும் ஜி20 மாநாட்டைத் தமிழகத்தில் நடத்த வேண்டுமெனத் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஜி8 நாடுகளோடு அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய 12 வளரும் நாடுகளும் சேர்ந்து மொத்தம் 20 நாடுகள் ஜி20 கூட்டமைப்பை உருவாக்கி ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் மாநாடு நடத்தி வருகின்றன. இந்த மாநாட்டில் அந்தந்த நாட்டைச் சேர்ந்த அதிபர்கள் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை பொறுப்பை ஏற்று இந்த மாநாட்டை நடத்தி வருகிறது.
முதன்முதலாக ஜி20 மாநாடு ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. அதுபோன்று கடந்த 2019ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டிலுள்ள ஒசாகா நகரிலும் நடைபெற்றது. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”2022ஆம் ஆண்டு இந்தியா நடத்தும் ஜி20 மாநாடு உலக அளவில் பெரிய நிகழ்வாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். அதன்படி இந்தியாவில் இந்த ஜி20 மாநாடு நடந்தால் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகப் பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டுக்காக மத்திய அரசு ரூபாய் 100 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் சிலவற்றைத் தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்ஜெட் தொடர்பாக நேற்று (பிப்ரவரி 2) அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு 2022ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் செய்தியாகும். இதற்காக மத்திய அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே நேரத்தில் இதுகுறித்து நடைபெற உள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் இரண்டு நிகழ்ச்சிகளைத் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, நாட்டு மக்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் வளர்ச்சியை மட்டுமே மையமாக வைத்துத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.�,”