அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு!

politics

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜனவரி 9) காலை 5 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து கடந்த 4ஆம் தேதி முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாட்டில் கடந்த 6ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இரவு நேர ஊரடங்கு முடிவுக்கு வந்து, தற்போது முழு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இன்றைய நாளில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் இயங்காது. டாஸ்மாக் மற்றும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவையும் இயங்காது.

மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனப் போக்குவரத்துக்கும், பெட்ரோல் பங்குகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பகல் மற்றும் இரவு நேரங்களில் இயங்கக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போன்று இயங்கும். சென்னையில் 50 சதவிகித மின்சார ரயில்கள் மட்டுமே இயங்கும். ரயில் மற்றும் விமானப் பயணிகள் தங்கள் சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு.

அதுபோன்று போட்டித் தேர்வு எழுதுபவர்கள் தங்களது ஆவணங்களைக் காண்பித்து சொந்த வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு. இன்றைய நாளில் திருமணத்துக்குச் செல்வோர் அதற்குரிய பத்திரிகையைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.

உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி, தங்களுடைய சொந்த விநியோக முறையில் மூலமாகவும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதியளிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறை ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நேற்றே தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துக் கொண்டனர். காய்கறி, மாளிகை, இறைச்சி கடை என அனைத்து கடைகளிலும் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் நேற்றிரவு பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சமூக இடைவெளி இல்லாமல், முகக்கவசம் அணியாமல் கூட்டமாக நின்று கொண்டிருந்ததை காணமுடிந்தது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

ஊரடங்கினால் சென்னை தலைநகர் வெறிச்சோடி காணப்படுகிறது. கோயம்பேடு சந்தை, கோயம்பேடு பேருந்து நிலையம், டி.நகர் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் பிரார்த்தனைகளும் இன்று இல்லாததால் அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன. கோயில்களுக்கு செல்லவும் இன்று அனுமதி கிடையாது.

முழு ஊரடங்கு கண்காணிப்புப் பணியில் தமிழ்நாடு முழுதும் 60,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். காலை முதலே வாகனங்களில் செல்லும் மக்களை விசாரித்து, உரிய ஆவணங்களை பார்த்து அனுமதி இருப்பின் அவர்களை பயணிக்க போலீஸார் அனுமதி வழங்கி வருகின்றனர்

தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீஸார் சார்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான ஒன்று, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் இன்றைக்குள் (ஜனவரி 9) கட்டாயம் தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்பது நினைவுக்கூரத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *