தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 28) வணிகவரி மற்றும் பதிவுத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது வணிகவரித் துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துறை ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், அவசர நிமித்தமாகப் பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவண பதிவுக்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும்.
அவசரமாக ஆவணப் பதிவை மேற்கொள்ள விரும்புபவர்களின் வசதிக்காக முன்பதிவு டோக்கன்கள் தட்கல் முறையில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு 5000 ரூபாய் கட்டணமாக விதிக்கப்படும்.
அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக் கிழமைகளிலும் செயல்படும். சனிக்கிழமைகளிலும் பதிவு பணி மேற்கொள்ளப்படும். இதற்குக் கட்டணமாக 1000 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வரித் துறையில் வரி ஏய்ப்பினை தடுக்க உதவுபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.
வணிக வரித்துறையில் வரி ஆய்வுக் குழு அமைக்கப்படும். வணிக வரித்துறையின் கால் சென்டர் மேம்படுத்தப்படும்.
வணிகவரி கூடுதல் ஆணையர் தலைமையில் தனி தணிக்கை பிரிவு உருவாக்கப்படும்.
சென்னை மற்றும் கோவையில் உள்ள இரண்டு இணை ஆணையர் நுண்ணறிவு பணியிடங்கள் கூடுதல் ஆணையர் நிலைக்குத் தரம் உயர்த்தப்படும்.
வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கத் தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள ஜிஎஸ்டி பிரைம் என்ற மென்பொருள் ரூ.47.20 லட்சம் செலவில் வாங்கி பயன்படுத்தப்படும்.
வணிக வரித்துறையில் சுற்றும் படையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நடப்பு நிதியாண்டு முதல் சீருடைகள் வழங்கப்படும்.
பொதுமக்களுக்குப் பத்திரப் பதிவு தொடர்பான சேவைகளை அளிக்க ஒருங்கிணைந்த சேவை மையம் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
சார் பதிவாளர் அலுவலகங்களில் பொது மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 50 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
பதிவுத் துறையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் 50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
திருமண சான்றிதழ்களில் திருத்தம் தேவைப்பட்டால் இணைய வழியாகவே விண்ணப்பித்துத் திருத்திய சான்றினை பெறும் வசதி 6 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
பதிவு நடைமுறைகள் தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 38 லட்சம் ரூபாய் செலவில் மாவட்டங்கள் தோறும் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நடத்தப்படும்.
அரசு நிலங்கள் பதிவு செய்யப்படுவதை ஆரம்ப நிலையிலேயே ஸ்டார் மென்பொருள் வழியாகத் தன்னிச்சையாகத் தடுக்கும் திட்டம் ரூ.12 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
**-பிரியா**