சுமார் முப்பது ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்றும் கட்சி ஆரம்பிப்பார் என்றும் தமிழ் சினிமா உலகிலும், அரசியல் அரங்கிலும் பரபரப்பாக பேசப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்…. கடந்த 2020 டிசம்பர் 29 ஆம் தேதி, ‘என்னை மன்னித்து விடுங்கள். என் உடல் நிலை காரணமாக, கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்’என்று கூறி தன்னைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்த அரசியல் பரபரப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.
இந்த நிலையில் ரஜினிக்கு நாளை (டிசம்பர் 12) 71ஆவது பிறந்தநாள் வருகிறது. பற்பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் மீது அரசியல் வாசனை வீசாத முதல் பிறந்தநாளாக இது அமைந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா சந்தித்துப் பேசினார். ரஜினி தேர்தல் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டாலும்… சசிகலாவின் சந்திப்பில் ரஜினியுடைய டெல்லி செல்வாகை வைத்து பாஜகவிடம் தனக்காக பேச வேண்டும் என்று [சசிகலா வேண்டுகோள் வைத்திருந்தார்](https://minnambalam.com/politics/2021/12/10/11/sasikala-request-rajini-poes-garden-meeting-latha-assurance-modi) என்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் சசிகலாவுடனான சந்திப்பு நடந்த மறுநாளே ரஜினி போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவர் தனது பிறந்தநாளன்று பொதுவாகவே யாரையும் சந்திக்கும் வழக்கமில்லாதவர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு அவர் பிறந்தநாள் என்றாலே தென்னிந்தியாவிலேயே இல்லாமல் இமயமலைக்குப் போய்விடுவார். சமீப ஆண்டுகளாக சிற்சிலர் அவரை பிறந்தநாளன்று சந்தித்துவந்தனர். இந்த முறை அவர் கேளம்பாக்கத்துக்குப் போனாலும் நாளை ரஜினியின் தனிப்பட்ட நண்பர்கள் சந்திப்பதற்காக போயஸ் கார்டனுக்கு வரச் சொல்லியிருக்கிறார் லதா ரஜினிகாந்த். ஆனால் ஒமிக்ரான் தொற்று போன்ற காரணங்களால் ரஜினி அதை ஏற்பாரா என்று தெரியவில்லை. ரஜினி போயஸ் கார்டன் வீட்டுக்கு வருவாரா என்பது இன்று இரவுதான் தெரியவரும் என்கிறார்கள் கார்டன் செக்யூரிட்டிகள்.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக ரஜினியின் பிறந்தநாள் என்றாலே உளவுத்துறையினரிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ளும். எந்தெந்த அரசியல் விஐபிகள் அவரை வாழ்த்துகிறார்கள், யார் யார் அவர் வீட்டுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கிறார்கள், ரஜினி எங்கே செல்கிறார், யாரை பார்க்கிறார் என்றெல்லாம் மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்புவதற்காக கார்டனையும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டையும் சல்லடை போட்டு கண்காணித்து வருவோம். காரணம் அவரைச் சுற்றிய அரசியல் வட்டம். ஆனால் இந்த முறை அது இல்லாததால் ரஜினி பிறந்தநாளன்று எங்களுக்கு பெரிய வேலை இல்லாமல் போய்விட்டது. உண்மையிலேயே ரஜினி தன் பிறந்தநாளுக்காக பல பரிசுகளைப் பெறுவார். ஆனால் எங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் பிறந்தநாள் பரிசு இதுதான்” என்கிறார்கள் உளவுத்துறை போலீசார். ரசிகர் மன்றத்தினரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினி இல்லத்தின் முன் இன்றே அவரது பிறந்தநாளை ஒட்டி பல விஐபி நண்பர்கள் அனுப்பும் பரிசுப் பொருட்கள் வந்து இறங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அரசியல் மின்சாரம் இல்லாத முதல் பிறந்தநாள் என்பதால் வழக்கமான கால் நூற்றாண்டுப் பரபரப்பை இந்த வருடம் மிஸ் செய்கிறது ரஜினி வீடு.
**வேந்தன்**
�,”