விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்: ஸ்டாலின் யோசனை!

Published On:

| By Balaji

விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதிலும் விவசாயம் மற்றும் அதுசார்ந்த பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வேளாண் பணிகள் நடந்தாலும் விளை பொருட்கள் போக்குவரத்து மற்றும் விற்பனை கடும் சிரமமாக இருப்பதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைகளைத் தெரிவித்தனர். இ

தனிடையே மேட்டூர் அணை நிரம்பிவிட்டதால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னரே அணையை திறக்க வேண்டுமென காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

இவை தொடர்பாக இன்று (மே 18) அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “அதிமுக அரசின் ஊரடங்கு கால நிவாரணங்கள் ஏதும் விவசாயிகளுக்கோ, விவசாயத் தொழிலாளர்களுக்கோ முறைப்படி சென்றடையாததால் – வேளாண் தொழிலை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள் நிம்மதியிழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் 12-ம் தேதி வழக்கமாக மேட்டூர் அணை நீர்ப்பாசனத்திற்குத் திறந்து விடப்படுவதில்லை என்ற நிலையே நீடித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், “உரிய காலத்தில் குறுவை விவசாயத்திற்கான நீர்ப்பாசனத்திற்கு, அணை திறக்கப்படாததால் விவசாயிகள் நொடித்துப் போயிருக்கிறார்கள். இந்த முறை நல்ல வாய்ப்பாக, இயற்கையாகவே மேட்டூர் அணையில் தற்போது போதிய நீர் – அதன் முழு கொள்ளளவான 120 அடியில், 100 அடி நீர் இருக்கிறது. ஆகவே, வருகின்ற ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, காலதாமதமின்றி அறிவிப்பினை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உழவு மானியம், டிராக்டர், டீசல் மானியம் அளிப்பதை உறுதி செய்திட வேண்டும். தேவையான விவசாயக் கடன் வசதிகள், வட்டி இல்லாமல், பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் வேண்டும் என்று கூறியுள்ள ஸ்டாலின்,

“விதைகள், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவை எவ்விதத் தடையுமின்றி கிடைக்கவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்ட “மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை” இலவசமாக அரசே வழங்கிடவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share