dகுறிகேட்கச் சென்ற முன்னாள் முதல்வர்!

Published On:

| By Balaji

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதுச்சேரியிலும், தமிழகம், கேரளத்தைப் போலவே ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தைதான் புதுவையின் இப்போதைய பரபரப்பு!

காங்கிரஸ் அணி தரப்பில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நகர்வுகள் இன்னும் தொடங்கவில்லை. ராகுல் காந்தியின் பிரச்சாரப் பயணத்தால் தமிழகத்தில் தி.மு.க. அணியின் முதன்மைக் கூட்டுக் கட்சியான காங்கிரஸ், பேச்சுவார்த்தைக்கு இடைவேளை விட்டிருந்தது. தி.மு.க. ஸ்டாலினின் 68ஆவது பிறந்த நாளான நேற்று அவருக்கு நேரில் வாழ்த்துக்கூற சென்னைக்குச் சென்றிருந்தார், நாராயணசாமி. அப்போது பூர்வாங்கப் பேச்சு ஏதும் நடத்தப்பட்டதா என்பது உறுதியாகவில்லை.

எதிர்த்தரப்பிலோ பாஜக தலைமையில், முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்குத் தாவிய சட்டமன்ற உறுப்பினர்களே 7 பேர் இருக்கின்றனர். மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அந்தக் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட முடிவுசெய்திருக்கிறது.

அ.தி.மு.க.வோ 10 தொகுதிகளைக் கேட்கிறது. ஆனால், அந்தக் கட்சிக்கு இப்போது 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும்நிலையில், கூடுதலாக ஒரு இடத்தைச் சேர்த்து 6 இடங்களைத் தரலாம் என பாஜக தரப்பு கூறியிருக்கிறது.

அண்மையில் நடந்த மாற்றங்களுக்கு ஆதரவளித்த முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியோ, தங்கள் கட்சிக்கு 15 தொகுதிகளும் நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவியும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வேண்டும் என மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு உவப்பான பதில் கிடைக்கவில்லை.

பாஜக தரப்பிலோ ஏழு அல்லது எட்டு தொகுதிகள்தான் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிப்பார்கள் என நம்பியிருந்த ரங்கசாமியின் எண்ணத்துக்கும் அடி விழுந்துள்ளது. தேர்தல் முடிந்த பின்னரே முதலமைச்சர் வேட்பாளர் பற்றி பேசமுடியும் என்பது பாஜகவின் நிலைப்பாடு.

இதனால், ரங்கசாமிக்கு பாஜக மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில் சிக்கல் வரும் என சற்றும் எதிர்பார்க்காத அவர், கூட்டணியாகத்தான் போட்டியிடவேண்டுமா தனித்தே போட்டியிட்டால் என்ன என்கிற இடத்துக்கு வந்துவிட்டார்.

அவரைப் பொறுத்தவரை, எந்த முக்கிய முடிவை எடுக்கும்போதும் தனக்கு ராசியான அழுக்கு சாமியாரிடம் கேட்டுவிட்டுதான் செய்வது வழக்கம்.

பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரில் இருக்கும் அந்த சாமியாரிடம் குறிகேட்பதற்காக, ரங்கசாமி நேற்று அங்கு புறப்பட்டுச் சென்றார். அழுக்கு சாமியாரைச் சந்தித்துவிட்டு இன்று புதுவை திரும்புகிறார்.

சாமியார் சொன்னதற்கு ஏற்பவே, கூட்டணியாகவா தனித்துப் போட்டியிடுவத என ரங்கசாமி முடிவெடுப்பார் என்கிறார்கள், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள்.

**- வணங்காமுடி **

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share