வெளிநாட்டுப் பயணிகள் புகார்: டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது வழக்கு!

Published On:

| By Balaji

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் புகார்களின் அடிப்படையில் தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய மாநில அரசுகளின் உத்தரவுப்படி வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பலர் தற்போது தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இதன் மூலம் திருச்சி விமான நிலையத்துக்குத் தினமும் வெளிநாடுகளிலிருந்து 400 முதல் 500 பயணிகள் வரை வருகிறார்கள்.

இந்தப் பயணிகளில் பலர் தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகளிடம் விமான கட்டணம், தனிமைப்படுத்துவதற்கான தங்குமிடம் மற்றும் உணவு செலவு, இரண்டு முறை கொரோனா பரிசோதனை ஆகியவற்றுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்துகிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தும் விதமாக சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மூலம் ஹோட்டல்களுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான முதல் மருத்துவ அறிக்கை இரண்டு நாட்களில் பெறப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களை அரசு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதர பயணிகள் இரண்டாவது மருத்துவப் பரிசோதனையை முதல் பரிசோதனை எடுக்கப்பட்ட நாளிலிருந்து ஏழாவது நாளில் எடுக்க வேண்டும். ஆனால் இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளாமல் பயணிகளைத் திசை திருப்பி ஆறாவது நாளிலேயே அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக கூறுவதாகவும், பயணிகளிடம் ஏற்கனவே தனி அறைக்கு பணம் பெற்று கொண்டு ஓர் அறையில் இரண்டு அல்லது மூன்று பேரை தங்க வைப்பதாகவும் தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது புகார்கள் வந்துள்ளன.

அவ்வாறு வந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் ஏஜெண்டுகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share