போலி மின்னஞ்சல் விவகாரத்தில் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரன் மற்றும் ஊடகத்தினருக்கு எதிராக மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இதுகுறித்து ஜூலை 5 ஆம் தேதி அந்த சேனலின் தலைமைக்கு தான் புகார் அனுப்பியிருப்பதாகவும் மாரிதாஸ் தெரிவித்தார். பின்னர், நியூஸ் 18 ஆசிரியர் வினய் சராவகியிடம் இருந்து மின்னஞ்சலில் பதில் வந்ததாகவும், குற்றச்சாட்டுகளை நியூஸ்18 தலைமை ஏற்றுக் கொண்டதாக அதில் கூறப்பட்டிருக்கிறது எனவும் கூறிய மாரிதாஸ், மின்னஞ்சலை காட்டினார்.
அடுத்த சிறிது நேரத்தில் வினய் சர்வாகி தனது ட்விட்டர் பக்கத்தில்,“ ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் எனது பெயரில் ஒரு போர்ஜரி மெயில் உலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எனது அலுவலகம் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார். இதன் மூலம் மாரிதாஸ் குறிப்பிட்ட மின்னஞ்சல் போலியானது எனத் தெரியவந்தது.
இதனையடுத்து, போலியான தகவல்களை பரப்பி வரும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை குற்றப்பிரிவுக்கு அனுப்பி விசாரணை நடத்த ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு அளித்த புகாரின் பேரில் மோசடி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, போலி ஆவணங்கள், போலிச் செய்திகளை பரப்புவதாக கூறி இந்தியத் தண்டனைச் சட்டம் 465, 469, 471 மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 43இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனினும், முதல் தகவல் அறிக்கையில் மாரிதாஸ் பெயர் இடம் பெறவில்லை. பெயரைக் குறிப்பிடாமல் ‘அடையாளம் தெரியாத போலி இ மெயில் கிரியேட்டர்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
**எழில்**
�,”