அமித் ஷாவின் இரண்டாவது உத்தரவும் நிறைவேற்றம்: திமுக வெளிநடப்பு!

Published On:

| By Balaji

என்.பி.ஆருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மறுத்ததால் அவையிலிருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

தமிழக சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. பேராசிரியர் க.அன்பழகன், திருவொற்றியூர் கே.பி.பி.சாமி, குடியாத்தம் காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அன்றைய சட்டமன்றக் கூட்டம் முடிந்தது. ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு இன்று (மார்ச் 11) சட்டமன்றம் மீண்டும் கூடியது.

நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, “தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு பதில் அளித்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். அத்தோடு, என்.பி.ஆர் கணக்கெடுப்பை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “என்.பி.ஆரில் உள்ள சந்தேகங்கள் குறித்து தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை சட்டமன்றத் தீர்மானம் கட்டுப்படுத்தாது. மக்களை ஏமாற்றும் பொய்யான தீர்மானத்தை கொண்டுவர தமிழக அரசு விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுத்ததால் அவையிலிருந்து ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “சிஏஏ, என்.பி.ஆருக்கு எதிராக வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை நிறைவேற்ற மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. அதுவரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பி தீர்மானம் கொண்டுவர வேண்டுமென கோரிக்கை வைத்தேன்.

ஆனால், சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை என்றே அமைச்சர் சொல்லிவருகிறார். என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கிச் சொன்னேன். சிஏஏ சட்டத்தை ஆதரித்தவர்கள் பிகார், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் தற்போது அவற்றிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் பல மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். வண்ணாரப்பேட்டையில் போராடுபவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு செவிமடுக்காத காரணத்தால் வெளிநடப்பு செய்தோம்” என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக மின்னம்பலத்தில், [அமித் ஷாவின் இரு உத்தரவுகள்: ஒன்று ஒ.கே. இன்னொன்று?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2020/03/10/17/amit-sha-two-oredres-to-edpadi-one-is-ok-another%3F) என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில்,

“தங்கமணி, ஜெயக்குமார் இருவரும் அமித் ஷாவை சந்தித்தபோது, சிஏஏ விவகாரம் மற்ற எந்த மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் அரசியலாகி வருகிறது. திமுக இதை வைத்து மிகப்பெரிய அரசியல் செய்து வருகிறது. திமுகவின் அரசியல் லாபத்தை தடுக்க வேண்டுமானால் சட்டமன்றத்தில் என்.ஆர்.சி. வேண்டாம் என்று ஒரு தீர்மானம் கொண்டுர வேண்டும்’ என்று எடப்பாடியின் மெசேஜை தெரிவித்தனர். ஆனால் அமித் ஷாவோ இந்த சட்டத்தில் எந்த அரசியலுக்கும் இடம் கிடையாது. அப்படி ஒரு தீர்மானத்தை எல்லாம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டிருக்கிறார்” என்று சொல்லியிருந்தோம்.

இந்த நிலையில் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரமாட்டோம் என்று தெரிவித்ததன் மூலம் அமித் ஷாவின் இரண்டாவது உத்தரவையும் நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share