விருதுநகர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பழமையான கோவில்களில் அனைத்துத் தரப்பு மக்கள் வழிபட இயலாத நிலை உள்ளது. அறக்கட்டளை என்னும் பெயரில் தனிநபரின் அத்துமீறல் தொடர்கிறது என்று மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவிடம் சம்பந்தப்பட்ட கிராமத்தினர் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
அவர்களது புகார் மனுக்களை அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து அவரிடம் நேரில் அளிப்பதற்காக… அமைச்சர் சேகர்பாபுவிடம் கடந்த 10 ஆம் தேதி நேரம் கேட்டிருந்தார் துரை வைகோ.
அப்போது அமைச்சர் சேகர்பாபு, “இது பொதுமக்கள் பிரச்சனை நீங்கள் என்னைத் தேடி வர வேண்டாம். நான் உங்களைத் தேடி உங்கள் இல்லத்திற்கு வருகிறேன்” என்று கூறி, நேற்று ஜூன் 11 ஆம் தேதி காலை வைகோவின் சென்னை அண்ணாநகர் இல்லத்துக்கே சென்றார். அங்கே துரை வைகோவையும், சம்பந்தப்பட்ட கிராமத்தினரையும் சந்தித்து பிரச்சினைகளை கேட்டுக் கொண்டார் அமைச்சர் சேகர்பாபு.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், வாழைக்குளம் கிராமம், அருள்மிகு ராக்காச்சி அம்மன் கோயில் பிரச்சனை, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சாளுக்கிய மன்னர்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, வட ஸ்ரீரங்கம் என அழைக்கப்படும், தேவதானம் ஸ்ரீரங்கநாதர் மற்றும் காணியம்பாக்கம் கிராமம் ஸ்ரீபிரசன்ன ஈஸ்வரர் ஆகிய இரண்டு திருக்கோயில்கள் தொடர்பான பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட கிராமத்தினரே விளக்கினார்கள்.
துரை வைகோவுடம் பிரச்சினை பற்றி விவரிக்க, அதை கேட்டுக் கொண்ட அமைச்சர் சேகர்பாபு, அங்கிருந்தபடியே துறையின் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார்.
வீடு தேடிச் சென்று அமைச்சர் சேகர்பாபு புகார்களை கேட்டுக் கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-**வேந்தன்**