வாயைத் திறக்க மாட்டேன் – அமைதி காத்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Published On:

| By Balaji

பால்வளத்துறை அமைச்சரும் விருதுநகர் அதிமுக மாவட்டப் பொறுப்பாளருமான ராஜேந்திரபாலாஜி இன்று (ஆகஸ்டு 22) கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, புனித நீரும் எடுத்துச் சென்றார்.

நேற்று இரவு கன்னியாகுமரிக்கு வந்த ராஜேந்திரபாலாஜி தற்போது தனது குல தெய்வக் கோயிலுக்காக விரதம் இருந்து வருகிறார். அதன்படி இன்று காலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித் துறை பகுதிக்கு தனது நெருக்கமானவர்கள் சிற்சிலரோடு மட்டுமே வந்தார்.

விருதுநகர் அருகே இருக்கும் மூலிப்பட்டி தவசிலிங்க சுவாமி கோயில்தான் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குல தெய்வக் கோயில். அங்கே வரும் 28 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருப்பதை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் தொடங்கியிருக்கிறார் அமைச்சர். அதன் அடையாளமாகவே சமீப நாட்களாக மஞ்சள் சட்டை அணிந்து வருகிறார். குல தெய்வக் கோயில் மீது அதீத பக்தி கொண்ட அமைச்சர், அக்கோயில் கும்பாபிஷேகத்தின்போது கலசங்களில் அபிஷேகம் செய்வதற்காக புனித நீர் சேகரிக்கும் கடமையை தானே ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதன்படி நெல்லை பாபநாசத்தில் தாமிரபரணி புனித நீரை ஆகஸ்டு 21 ஆம் தேதி சேகரித்தார்.

அதன் அடுத்த கட்டமாக அங்கிருந்து கன்னியாகுமரிக்கு நேற்று இரவு சென்று தங்கினார். இன்று காலை முக்கடல் சங்கமத்தில் புனித நீராட வந்தார். லுங்கி பனியன் அணிந்து தலையில் காவி தலைப்பாகை ஒன்றை கட்டியிருந்தார். கடலில் இறங்கி நீராடியவர் பின் ஒரு கேனில் புனித நீரையும் சேகரித்துக் கொண்டார். குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று வழிபட்டார். புனித நீர் எடுத்துக் கொண்டு வந்தபோது கடற்கரையில் ஒரு கழிவறை இருந்தது. ‘என்ன இது இங்க இருக்கு?’ என விசாரித்தார்.

ஆமாங்க. புனித நீராடனு சொல்லிட்டு இங்க வர்றாங்க. ஆனால், பக்கத்துலயே கழிவறை இருக்கு. இதைக் கடற்கரையில இருந்து தள்ளி வைக்கச் சொல்லி பலமுறை சொல்லியும் கேட்கமாட்டேங்குறாங்க. இந்த கழிவறையின் கழிவுகளெல்லாம் கடல்லதான் கலந்துவிடுறாங்க. அதுவும் புனித நீராடும் இடத்துலதான் கலக்குது” என்று அங்கிருந்தோர் குறையாய் அமைச்சரிடம் சொல்ல, “நான் அறநிலைய அமைச்சரா இருந்தா இப்பவே இதை மாத்த சொல்லியிருப்பேன். நான் அறநிலைய அமைச்சர்கிட்ட இதைப் பத்தி சொல்றேன்” என்று வாக்குறுதி அளித்தார்.

ராஜேந்திரபாலாஜி குமரி வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் செம தீனி கிடைக்கும் என்று பத்திரிகையாளர்கள் சிற்சிலர் அங்கே அவரைத் தேடி வந்துவிட்டனர், ஆனால் அமைச்சரோ வழக்கத்துக்கு மாறாக பிரஸ்மீட் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ‘என்னை வாய திறக்கக் கூடாதுனு சொல்லியிருக்காங்க. அதனால இப்ப அரசியல் எதுவும் வேணாம். அடுத்து திருச்செந்தூர், பவானி, கும்பகோணத்தில் புனித நீர் எடுக்கணும்’ என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் ராஜேந்திரபாலாஜியின் பேட்டி, ட்விட் ஆகியவை சர்ச்சைக்கு உள்ளானதால் அவரை இது தொடர்பான அரசியல் எதுவும் பேச வேண்டாம் என்று ஓ.பன்னீரும், எடப்பாடியும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். கூட்டறிக்கையும் விட்டிருக்கிறார்கள். இதையடுத்தே குமரி வரை வந்தும் அமைதி காத்துச் சென்றிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. குமரிப் பத்திரிகையாளர்கள் இதை ஆச்சரியமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

**வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share