மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது : அமைச்சர் ராமச்சந்திரன்

Published On:

| By Balaji

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக அமைச்சர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து இன்று(ஜூலை 29) வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து, வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாக பரிசீலித்து, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளை கூட்ட நெரிசல் இன்றி பெற்று செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினைத் தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும். தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share