நா.மணி
இருபது மாதங்கள் கழித்து, தேசப் பிதா, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்டோபர் 2 ஆம் தேதியன்று, கிராம சபைகள் கோலாகலமாக கூட இருக்கிறது. இந்த கிராம சபைக் கூட்டங்களில், முக்கியப் பேசு பொருளாக தொடக்கக் கல்வி மாற இருக்கிறது. கற்றல் இடைவெளியை ஈடு செய்ய, துவண்டு கிடக்கும் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்ட, சுமார் 50000 பள்ளிகளைச் சேர்ந்த, 3.40 இலட்சம் மாணவர்களுக்கு 2.15 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு, அந்தந்த குடியிருப்பு பகுதிகளிலேயே, மாலை நேர கற்றல் மையங்களை மக்கள் பள்ளி” என்ற பெயரில் துவக்க இருக்கிறது தமிழ் நாடு அரசு.
**இந்தியாவிலேயே முதல் முயற்சி**
இந்திய நாட்டில்,எந்த மாநிலமும் நினைத்துக்கொண்டு கூட பார்க்காத பெருமுயற்சி இது. எந்த கிராமங்கள், கொரானாவால் மிக நீண்ட தூக்கத்தில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த கிராமங்களில் உள்ள, நடுநிலைப் பள்ளிகளும், அதில் படிக்கும் குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் வழியாக புத்தொளி பெற உள்ளனர். தமிழ் நாட்டில் அறிவொளி இயக்கத்தை அரசுடன் இணைந்து முன்னெடுத்த, தமிழ் நாடு அறிவியல் இயக்கம் தொடங்கி, கல்வியியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்த, தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. ஆசிரியர் சங்கங்களிடமும், அதன் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று நேரில் அழைத்து கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் தொடக்க நிலைப் பணிகளில் ஒன்றாக, அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களை “மக்கள் பள்ளிகள்” வருகையை உணர்த்தும் கட்டியங்காரனாக, அதற்கான களமாக மாற்ற கிராம சபைக் கூட்டங்களை பயன்படுத்த தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது.
**கிராம சபைகளில் மக்கள் பள்ளி**
அக்டோபர் 2 ஆம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில், “மக்கள் பள்ளி” என்ற எந்த நிகழ்ச்சி நிரலையும் தமிழ் நாடு அரசு இணைத்துள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டார வள மைய கருத்தாளர்கள் வரை அனைத்து கல்வித் துறை அலுவலர்களையும் தமிழ் நாடு அரசு கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்தப் பொருள் பற்றி விளக்கிப் பேசிட அறிவுறுத்தியுள்ளது.
அரசியல் சாசனத்தின் வழி அதிகாரம் பெற்ற கிராம சபைகளில் இத்தனை ஆயிரம் கல்வித் துறை அலுவலர்கள் பங்கேற்க இருப்பது இந்திய வரலாற்றில் முதன்முறையாக இருக்கலாம். கல்வியின் மீது அழுத்தம் தரும் கூட்டப் பொருள் வைக்கப்படுவதும் கூட முதல் முறையாக இருக்கலாம்.
கொரானாவால் ஏற்பட்ட கல்விப் பாதிப்பை, இப்படி ஒரு விரிவான திட்டத்துடன், மக்கள் பங்கேற்பையும் இணைத்து செய்யும் முயற்சி முழு வெற்றி பெற வேண்டும். அப்படியான ஒரு பெரு முயற்சிக்கு, பொது மக்கள் தமிழக கிராம சபைகளில் அக்டோபர் 2 ஆம் தேதியன்று குவிந்திட வேண்டும். இந்த சீர்மிகு அரசின் திட்டப் பணிகளுக்கு காது கொடுங்கள். ஆதரித்து பேசுங்கள். கூட்டம் முடிந்ததும், ஊரில், ஊர் பொது வெளியில், சந்திக்கும் மக்களிடம் இந்தத் திட்டம் குறித்து பேசுங்கள்.
அனைத்து கல்லூரி மாணவர்களும் இத்திட்டத்தில் இணைய தமிழ் நாடு அரசு அறைகூவி அழைக்க இருக்கிறது. உங்கள் வீடுகளில் உங்கள் பிள்ளைகள் கல்லூரிகளில் படிக்கலாம். இளைஞர்கள், யுவதிகள் இருக்கலாம். பொதுச் சேவகம் செய்ய நல்ல களத்தை தேடிக் கொண்டு இருக்கலாம். அவர்களை ஆற்றுப் படுத்தி அனுப்பி வையுங்கள். இத்திட்டம் பற்றிய அடையாளம் காட்டுங்கள். சேவை மனப்பான்மையோடு, இந்தப் பணியை செய்ய முன்வந்தாலும், இதில் இணைந்து செயல்படுவோருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். மக்கள் பள்ளி திட்டம் நிறைவடையும் போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்றிதழ் அளித்து கௌரவிப்பார்.
**எப்படி நடக்கும் மக்கள் பள்ளிகள்**
ஆறுமாத காலம் “மக்கள் பள்ளிகள்” செயல்படும். பின்னர் தன்னார்வமாக அதே தொண்டர்களோ உள்ளூர் சமூகமோ இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லலாம். இவை தற்போதைய பள்ளிகளுக்கு மாற்றோ, போட்டியானதோ அல்ல. மாறாக கொரானா கல்வி இழப்பை ஈடுகட்டும் உறுதுணை மைதானங்கள் இவை. பள்ளி நேரம் முடிந்த பிறகு, குடியிருப்பு பகுதிகளில் மாலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே நடக்கும்.
இந்த மக்கள் பள்ளியில் என்ன கற்றுக் கொடுப்பது, எந்த வடிவத்தில் கற்றுக் கொடுப்பது என்பதெல்லாம் தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு பயிற்சி அளிக்க திட்டமிட்டு வருகிறது பள்ளிக் கல்வித் துறை.
கிராம சபைக் கூட்டங்கள் முடிந்து, மக்கள் பள்ளி தொண்டர்களை அடையாளம் காண வீதி நாடகங்கள் பாடல்கள் ஆடல்களோடு கலைப் பயணம் நமது வீதிகளை நிரப்ப உள்ளது நம்மை உணர்வூட்டி களத்தில் இறங்க வருகிறார்கள். இதுதவிர காணொளிகள், குறும்படங்கள், மீம்ஸ்கள், முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் பெரும் ஆளுமைகள் உங்களை அந்த திட்டத்திற்கு ஆதரவு அழைப்பு விடுக்க உள்ளனர். களம் காண இருக்கும் தொண்டர்களை கரம் கோர்த்து அழைத்து செல்ல இருக்கின்றனர்.
**நிறைவேற்றப்பட்ட நிதியமைச்சரின் உறுதி**
வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் கட்டமாக எட்டு மாவட்டங்களில் இந்தப் பணியை தமிழ் நாடு அரசு தொடங்கிட உள்ளது. காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கடலூர் விழுப்புரம் என எட்டு மாவட்டங்களில் இந்தப் பணி துவங்கப்பட உள்ளது. இதர மாவட்டங்களில் நவம்பர் மாதம் 15 தேதி முதல் இம்மக்கள் பள்ளிகள் தொடங்கப்படும். தொண்டர்களை தேர்வு செய்ய தனியாக செயலியை வடிவமைப்பு செய்யவும் கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது.
என்னதான் கல்வி தொலைக்காட்சியோ, வாட்ஸ்அப் வழி செய்திகள் வழியாகவோ கற்றல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முயன்றாலும், நமது மாணவர்களின் சமூக பொருளாதார நிலைகள் காரணமாக பெரும்பாலும் கற்றல் நடைபெறவேயில்லை.
கொரானா காலத்தின் பல்வேறு பாதிப்புகளில் பெரும் பாதிப்பு, கற்றல் பாதிப்பு. குறிப்பாக எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளின் கல்வியில் பெரும் பாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளது.
தமிழ் நாடு அரசு இதனை சரியாகவே அடையாளம் கண்டு காத்திரமான நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி தமிழ் நாடு அரசு நிதிநிலை அறிக்கையிலேயே தெரிவித்தது. கொரானா பாதிப்பின் கற்றல் இழப்புகளை, உடனடி முன்னணி பணியாக முன்னெடுக்கும் என்று சட்ட சபையிலேயே நிதி அமைச்சர் அறிவித்தார்.
இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை செம்மையாக பயன்படுத்த மக்கள் பங்கேற்பு, மக்கள் தங்கள் உடமையாக, தங்கள் கடமையாக கருதுதல் அவசியம். அதை நோக்கித் தான் அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை பயன்படுத்த தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. நாமும் பங்கேற்பது, தெரிந்தோரையெல்லாம் பங்கேற்க கேட்டுக் கொள்வது காந்தி பிறந்த நாளின் நமது கடமை.
**கட்டுரையாளர் குறிப்பு:**
நா. மணி, பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு, மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: tnsfnmani@gmail.com
�,”