பாட்டிலுக்கு 5 ரூபாய்: கரூர் நபரின் கறார் வசூல்- டாஸ்மாக் ஆடியோ அம்பலம்!

politics

தமிழக அமைச்சர்களில் இரண்டு முக்கிய பெரும் துறைகளை வகித்து வருகிறார் செந்தில் பாலாஜி.

ஒன்று மின்சாரத்துறை. இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகளை உள்ளடக்கிய மதுவிலக்கு துறை. இந்த இரண்டு துறைகள் சார்ந்துமே கடுமையான சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் செந்தில் பாலாஜி.
ஒருபக்கம் மின்வெட்டு காரணமாக திமுகவினரின் கடுமையான புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர், இன்னொரு பக்கம் அதே திமுகவினரால் டாஸ்மாக் வசூல் விஷயத்திலும் கடுமையான புகார்களுக்கு உள்ளாகி வருகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர், “குறிப்பாக கரூர் ரமேஷ் என்பவர் பார்களை ஏலம் எடுத்த ஒவ்வொரு திமுக நிர்வாகிக்கும் போன் போட்டு அந்தந்தக் கடையின் சூப்பர்வைசர்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் எம்ஆர்பி க்கு அதிகம் வைத்து விற்கிறார்கள். அவர்களிடம் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வாங்கி எங்களிடம் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் நகர செயலாளராக இருந்த செந்தில்குமாரிடம் (உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் இவர் இப்போது ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்) கரூர் ரமேஷ் அலைபேசி செய்து, செந்தில்குமார் பார் எடுத்திருக்கும் டாஸ்மாக் கடைகளின் சூப்பர்வைசர்களிடம் அவர்கள் விற்கும் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வாங்கிக் கொடுக்குமாறு கூறி உள்ளார். இதை செந்தில்குமார் சின்னசேலம் கடை எண் 11725 கடையின் சூப்பர்வைசர் ரவிக்குமாரிடம்
கூறி ரமேஷ் அலைபேசி எண்ணையும் கொடுத்து பேசச் சொல்லி உள்ளார்.

இதையடுத்து சின்னசேலம் கடை எண் 11 725 சூப்பர்வைசர் ரவிக்குமார் கரூர் ரமேஷிற்கு போன் செய்து, “எங்கள் நகரச் செயலாளர் செந்திலுக்கு நீங்கள் போன் செய்து கடைகளில் விற்கும் பாட்டிலுக்கு தலா ஐந்து ரூபாய் கேட்டீர்களாம். டாஸ்மாக் கடைகளில் இருந்து உங்களுக்கு ஒரு ரூபாய் கூட தர முடியாது” என்று பேச அதற்கு கரூர் ரமேஷ், ‘நான் உங்களிடம் பேசினேனா? நீங்கள் ஏன் என்னிடம் பேசுகிறீர்கள்? நீங்கள் வேண்டுமென்றால் மாவட்ட மேனேஜரிடம் பேசுங்கள்’ என்று கூறுகிறார்.
இதையடுத்து அருகில் இருந்த திமுக நகர செயலாளர் செந்தில்குமாரிடம் போனை கொடுக்கிறார் கடை சூப்பர்வைசர் ரவிக்குமார்.
அப்போது கரூர் ரமேஷிடம் பேசும் திமுக நகர செயலாளர் செந்தில்குமார், ‘சார் நீங்கதானே என்கிட்ட பேசினீங்க. டெய்லி 2000 பாட்டில் விக்கிறாங்க. பாட்டிலுக்கு 5 ரூபாய் வாங்கித் தரச் சொல்லி நீங்க கேட்டீங்க. தமிழ்நாடு ஃபுல்லா இது தன் புரொசீஜர்னு சொன்னீங்க. நீங்க சொன்னதைத்தான் அவர்கிட்ட சொன்னேன்” என்று நகர செயலாளர் கூற அதிர்ந்து போகிறார் கரூர் ரமேஷ்.
ஆனாலும் சுதாரித்துக் கொண்டு, ‘நான் என் நம்பரை அவரிடம் கொடுக்க சொன்னேனா? நீங்க ஏன் என் நம்பர அவர்கிட்ட கொடுத்தீங்க? நான் உங்ககிட்ட எதுவும் கேட்கவே இல்லையே?” என்று மறுக்கிறார் ரமேஷ்.
ஆனால் நகர செயலாளர் செந்தில்குமார், ‘நீங்களே என் கிட்ட பேசிட்டு இப்ப இல்லைன்னு சொல்றீங்க. அப்ப இனிமே என்கிட்ட பணம் கேட்க மாட்டீங்களா?” என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்.

டாஸ்மாக் ஊழியர்களிடத்தில் கரூர் ரமேஷ் என்பவர் தமிழகம் முழுவதும் அதிகாரத்தை பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டு இருப்பது இந்த உரையாடல் மூலம் அப்பட்டமாக தெரிகிறது.
கரூர் ரமேஷ் யாருக்காக வசூல் செய்கிறார்? வசூல் செய்து யாரிடம் கொடுக்கிறார்? என்ற கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டும். இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்கிறார்கள் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *