ஜார்க்கண்ட்: முதன்முறையாக 10 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு!

Published On:

| By Balaji

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன்முறையாக 10 பெண் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. இதில் ஜெஎம்எம், ஆர்.ஜே.டி அடங்கிய காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் வரும் 28ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்றும் துணை முதலமைச்சர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று தலைநகர் ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த அனைத்து முடிவுகளும் எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாநிலமான ஜார்க்கண்டில் இதுவரை இல்லாத வகையில், 10 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மாநிலம் உருவானதிலிருந்து 10 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. அதிகபட்சமாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக ஆகியவற்றிலிருந்து தலா 3 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த 10 பெண்களில், 6 பேர் இந்த தேர்தல்களில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஒன்பது பெண்கள் வெற்றி பெற்றனர், 2009இல் 8 பேரும், 2005இல் 5 பெண் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது 10 பேர் தேர்வாகியுள்ளனர். 81 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் 127 பெண் வேட்பாளர்கள் களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share