பிரிட்டனில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் பல்வேறு நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. டெல்டா வகை கொரோனாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. குறிப்பாக பிரிட்டனில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியா உள்பட 63 நாடுகளில் ஒமிக்ரான் பரவி வந்தாலும், இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பிரிட்டனில் ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,”துரதிர்ஷ்டவசமாக ஒமிக்ரான் காரணமாக மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஒருவர் தற்போது நமது நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஒமிக்ரான் கொஞ்சம் வலிமை குறைந்த கொரோனா வகையாக இருக்கலாம். ஆனால், இது பரவும் வேகத்தை நாம் குறைத்து மதிப்பிட்டு விட கூடாது. அதிக வேகத்தில் ஒமிக்ரான் பரவி வருகிறது. இதனால் மக்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸை போட்டுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் உயிரிழந்த செய்தி உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
**வினிதா**
�,