தஞ்சையில் மின் விபத்தால் ஏற்பட்ட பதற்றம் தனியாத நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் காலை 11 மணியளவில் வெடி சத்தம் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்தக் கட்டிடத்தில் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் குடோனில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை என்பதால் அங்கு ஆக்சிஜன் சிலிண்டரும் இருக்கலாம், அவை வெடித்திருக்கலாம் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து காரணமாக அந்த கட்டிடத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மாற்று இடத்திற்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர். கீழ்த்தளத்தில் பற்றிய தீயால் ஏற்பட்ட புகை மேல் தளத்துக்கும் செல்வதால் அங்கிருக்கும் நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
அதுபோன்று தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் இதுவரை நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே பாதிப்பு குறித்துத் தெரியவரும் என்று கூறினர்.
**-பிரியா**