கடந்த 2018 ஆம் ஆண்டு காவேரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடந்தன. அந்தப் போராட்டங்களில் ஒன்றாக கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
மெரினா கடற்கரை சாலையில் உழைப்பாளர் சிலை அருகே மறியலில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் ஸ்டாலின், தொல் திருமாவளவன், ஜவாஹிருல்லா, சரத்குமார், காதர் மொய்தீன், திருநாவுக்கரசர், கராத்தே தியாகராஜன் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தவிர 500 பெண்கள் உட்பட 3000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சரத்குமார் தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதையும், அந்தப் போராட்டத்தில் சரத்குமார் கலந்துகொள்ளவே இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கையில் சரத்குமார் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள் சமத்துவ மக்கள் கட்சியினர்.
இவ்வழக்கு விசாரணை எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. வழக்கு கடந்த 20ஆம் தேதி நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் வரும் 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
�,”