நுபுர் ஷர்மா: ஒரு பக்கம் பாதுகாப்பு, இன்னொரு பக்கம் வழக்கு!

Published On:

| By admin

நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி பேசியதாக உலக அளவில் சர்ச்சைக்குள்ளான பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது டெல்லி காவல்துறை இன்று (ஜூன் 9) வழக்குப் பதிந்துள்ளது.

பாஜகவைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நவீன் ஜிண்டால், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, சர்ச்சைக்குரிய பாதிரியார் யதி நரசிங்கானந்த் மற்றும் பலர் பொது அமைதியைப் பேணுவதற்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டதாகவும், மக்களை பிளவுபடுத்தும் வகையில் தூண்டுவதாகவும் கூறி டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லி காவல்துறையினர், “பொது அமைதியைப் பராமரிப்பதற்கு எதிராக செய்திகளை இடுகையிடுபவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் மற்றும் மக்களிடையே தூண்டுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல்), 295 ( பிற மதத்தினரை அவமதிக்கும் காயப்படுத்துதால்), 505 (பொது அமைதியை சீர்குலைக்க வழிவகுக்கும் அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வகையில் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக ஒரு வழக்கும், ஒவைசி, ஜிண்டால், நரசிங்கானந்த், ஷதாப் சவுகான், சபா நக்வி, மௌலானா முஃப்தி நதீம், அப்துர் ரஹ்மான் மற்றும் குல்சார் அன்சாரி உள்ளிட்டோர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

முகமது நபியைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் எழுந்ததை அடுத்து, நுபுர் ஷர்மா, அவரது குடும்பத்தினருக்கு டெல்லி காவல்துறை பாதுகாப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் பாதுகாப்பு வழங்கும் போலீஸாரே இன்னொரு பக்கம் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

-**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share