கொரோனா மருந்தில் இந்தியாவின் முக்கியத்துவம்: பிரதமர்

Published On:

| By Balaji

மருத்துவத் துறைக்கு எடுத்துக்கட்டாக இந்தியா திகழ்கிறது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்தியா குளோபல் வீக் – 2020 மாநாடு நேற்று (ஜூலை 9) தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த 5,000 பேர் பங்குபெறுகிறார்கள், 75 அமர்வுகளில் 250 பேர் வரை உரையாற்றுகின்றனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார்.

தொடக்க உரையாற்றிய பிரதமர், “சமூகம், பொருளாதாரம் என ஒவ்வொரு சவாலையும் இந்தியா வென்றுள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது. இந்தியா உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக வலுவான போரில் ஈடுபட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் அதே நேரம், பொருளாதார வளர்ச்சிக்கும் சமமான கவனம் செலுத்துகிறோம். பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்குத் தேவையான சலுகைகளை அரசு வழங்கியிருக்கிறது. சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள், கடன் ஆகியவை மக்களுக்குச் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியாவில், பொருளாதார மீட்சிக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுகின்றன எனத் தெரிவித்த பிரதமர், “உலகப் பொருளாதார மறுமலர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. ஆறு ஆண்டுகளாக வரி சீரமைப்பு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து உலகளாவிய நிறுவனங்களும் வந்து இந்தியாவில் தங்கள் இருப்பை நிலைநாட்ட நாங்கள் சிவப்பு கம்பளம் விரிக்கிறோம்.

இந்தியாவின் பல்வேறு புதிய தொழில் துறைகளில், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. விவசாயத்தில் சீர்திருத்தங்கள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் விவசாய தளவாடங்கள் ஏற்படுத்துவதில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் சீர்திருத்தம் கொண்டுவந்துள்ளோம். வளர்ந்து வரும் இத்துறை, பெரிய தொழில் துறையைப் பூர்த்தி செய்யும். பாதுகாப்புத் துறையிலும், முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன” என்றும் கூறினார்.

மேலும், “இந்திய மருத்துவத் துறை ஒட்டுமொத்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் அதிகமாக இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share