நிதி நிலைமை சீராகட்டும்!- அரசு ஊழியர் மாநாட்டில் முதல்வர்

politics

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாடு அச்சங்கத்தின் தலைவர் மு.அன்பரசு, தலைமையில் டிசம்பர் 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.செல்வம், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோரோடு இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் கலந்துகொள்ள சிறப்புரையாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசு ஊழியர்களுடன் எப்போதுமே பிணைப்பு கொண்டுள்ள திமுக இம்முறை ஆட்சி அமைத்தும் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சற்று காலதாமாதமானது. இந்த நிலையில் இந்த மாநாட்டில் தமிழகத்தின் நிதி நிலைமை உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி விளக்கியிருக்கிறார் முதல்வர்.

அவரது சிறப்புரையில், “நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும். ஒரு அடுக்குமொழி உண்டு, பேச்சைக் குறைத்து நம்முடைய திறமையை காட்டிட வேண்டும். ஆங்கிலத்திலே ஒரு வார்த்தை உண்டு. “Do or die” “செய் அல்லது செத்து மடி” ஆனால் அதைக்கூட வார்த்தையை கொஞ்சம் திருத்தம் செய்து சொல்லவேண்டும் என்று சொன்னால் என்னைப் பொருத்தவரையிலே, இந்த Do-வுக்கும் Die-க்கும் உள்ள or-என்ற வார்த்தையை நீக்கிவிட்டு Do and Die செய்து முடித்துவிட்டு தான் சாகவேண்டும் என்ற உணர்வோடு நான் என்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதை துவக்கத்திலேயே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம் – அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை. திமுக ஆட்சி இருக்கும்போது அரசு ஊழியர்களுடைய பொற்கால ஆட்சியாக எப்போதும் அமைந்திருக்கிறது என்று இங்கு உரையாற்றியவர்கள் குறிப்பிட்டார்கள். இப்போதும் அப்படித்தான் அமையும் என்று சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

அரசு அலுவலர்கள் நடத்தை பற்றிய ரகசியக் குறிப்பேட்டை நீக்கியவர் கலைஞர். அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கியவர் தலைவர் கலைஞர். இந்தக் கருணைக் கொடையை இந்தியாவிலேயே வழங்கிய முதல் அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கியதும் கழக அரசுதான்!ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாகப் பெறக்கூடிய திட்டம் அதை அமல்படுத்தியர் தலைவர் கலைஞர். திருமணக் கடன், வாகனக் கடன், வீடுகட்டக் கடன் ஆகியவை வழங்கியவர் கலைஞர் அவர்கள் தான்! மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்படுத்தித் தந்தவரும் கலைஞர்தான். 6 மாதத்துக்கு ஒரு முறை ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்த்தும்போதெல்லாம் மாநில அரசு ஊழியர்க்கும் வழங்கியவர் கலைஞர்! ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல்களை வழங்கியது நம் ஆட்சியில்தான்”என்று அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு கடந்த காலங்களில் செய்த நன்மைகளைப் பட்டியலிட்ட முதல்வர்,

“கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் ஏராளமான திட்டங்கள் அரசு ஊழியர்களுக்குச் செய்து தரப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதியை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளோம்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து நிதிநிலை அறிக்கையில் 1.4.2022 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வரப்பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, இந்த அரசுக்கு கடும் நெருக்கடியான நிதி சூழல் இருப்பினும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத காலம் முன்னதாகவே அதாவது 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும். இதன் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வு பெறக்கூடிய வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்திய ஆட்சிதான் இந்த திமுக ஆட்சி. இதன்மூலம் தற்போது பணியில் இருக்கக்கூடிய 29 ஆயிரத்து 137 சமையலர்களும் 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெற்றுள்ளார்கள்.

அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக் காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020-ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதி மூலம் அவர்களுடைய பணித்திறன் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மேலும் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை ஒன்றிய அரசால் அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி அந்த அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணி தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களைத் தற்காலிகப் பணி நீக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் என்று அறிவித்த ஆட்சி இந்த ஆட்சி” என்று அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

மேலும் முதல்வர் ஸ்டாலின், “ கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அதிமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் ஏராளமான போராட்டங்களை நடத்தினீர்கள். அப்போது பல்வேறு நடவடிக்கைகளுக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டீர்கள். இந்த வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். இதனைப் பரிவுடன் பரிசீலித்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் ஆகியவற்றைப் பணிக்காலமாக முறைப்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி!

மக்களாட்சித் தத்துவத்தில் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்கக்கூடிய அரசு ஊழியர்களின் நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயமாக படிப்படியாக ஆனால் அதே நேரத்தில் உறுதியாக நிறைவேற்றறப்படும் என்று நான் தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறேன். அந்த உரிமையுடனும் தகுதியுடனும்தான் நான் இந்த மாநாட்டுக்கு வருகை தந்துள்ளேன்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருக்கும் அன்புக்குரிய சகோதரர் மு.அன்பரசு சில நாட்களுக்கு முன் ‘தீக்கதிர்’ நாளேட்டில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதையும் படித்துப் பார்த்தேன். அதில் அவர் சொல்கிறார். தன்னுடைய கோரிக்கைகள் அனைத்தையும் விரிவாக எழுதிய அன்பரசு… ‘அரசிடம் கோரிக்கை வைப்போம்!ஆட்சியாளர்களைத் திரும்பிப் பார்க்க வைப்போம்!’ என்று முடித்திருக்கிறார்.நான் திரும்பிப் பார்ப்பவனாக இருக்க மாட்டேன் -உங்களில் ஒருவனாக நானும் இருப்பேன். அதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் நான் இந்த மாநாட்டிற்கு தேடி வந்திருக்கிறேன்.நீங்கள் அரசு ஊழியர்கள். நான் மக்கள் ஊழியன். அதுதான் வித்தியாசம். எனவே, உங்கள் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை நான் உணர்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன்.

அரசாங்கம் இப்போது உள்ள நிலைமையை நீங்கள் உணர்ந்தாக வேண்டும், ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று நான் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.ஐந்து லட்சம் கோடிக் கடனில் இருக்கிறோம். கடந்த பத்தாண்டுகாலமாகத் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சீரழித்தும் – சூறையாடியதுமான ஒரு ஆட்சி நடந்தது. நான் அரசியல் பேச விரும்பவில்லை. இருக்கக்கூடிய எதார்த்தைத்தான் சொல்கிறேன். அதை நான் உங்களிடம்தான் கூற முடியும். வேறு யாரிடமும் கூறமுடியாது. இந்தக் கடந்த காலத் தவறுகளில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் பணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

நிதிநிலைமையைச் சரி செய்தாக வேண்டும்.5 லட்சம் கோடிக் கடன்களை அடைத்தாக வேண்டும்.புதிய தொழில்களை, தொழில் நிறுவனங்களை அழைத்து வருவதன் மூலமாக வளர்ச்சியை உருவாக்க முனைந்து வருகிறோம். அதற்கான கொள்கை அறிவிப்புகளைச் செய்துள்ளோம். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஈடுபட்டிருக்கிறோம்.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா என்ற கொடிய தொற்று நோய், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அதிகமாகப் பாதித்துவிட்டது. அந்தத் தொழில்களை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவரப் போராடி வருகிறோம்.

இத்தகைய முன்னெடுப்புகளின் மூலமாகத்தான் தமிழகத்தை மீண்டும் தலைநிமிர வைக்க முடியும் என்ற உணர்வோடு உழைத்து வருகிறோம்.இவை அனைத்தும் உங்களுக்குப் புதிய செய்திகள் அல்ல.

உங்களுக்குத் தெரிந்த செய்திகள்தான். தமிழ்நாட்டின் நிதி நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக, உறுதியாக இருக்கிறது. அப்போது உங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் நீங்கள் கேட்காமலேயே, இது போன்ற மாநாடுகளையெல்லாம் போட்டு என்னை அழைத்து வந்து இந்த உறுதியை கேட்காமேலேயே அந்த கோரிக்கையை நிச்சயமாக இந்த அரசு நிறைவேற்றித் தரும். ஆகவே நான் இருக்கிறேன், நீங்கள் இதைப்பற்றி சிறிதளவும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

பேரறிஞர் அண்ணா அவர்கள், ஒன்று சொன்னார். ”பெட்டி இருக்கிறது, பூட்டு இருக்கிறது, சாவி இருக்கிறது, ஆனால் பெட்டி காலியாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

அரசாங்கத்தின் கஜானாவை நாம் அனைவரும் சேர்ந்து நிரப்பியாக வேண்டும். அரசாங்க கஜானாவுக்கு வர வேண்டியதில் மிக முக்கியமானது சரக்கு மற்றும் சேவை வரி. அதனை மொத்தமாக ஒன்றிய அரசு பறித்துவிட்டது. அவர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள்.’கொத்தடிமை போன்ற நிலை அகலட்டும்’ என்று அன்பரசு அவர்கள் எழுதி இருக்கிறார்கள். நிதி நிலைமையைப் பொறுத்தவரை ஒன்றிய அரசிடம் கொத்தடிமை முறையைப் போலக் கையேந்தும் நிலைமையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன.ஜி.எஸ்.டி., முதல் வெள்ள நிவாரண நிதி வரைக்கும் நமக்குத் தரவேண்டிய நிதிகளே முழுமையாகத் தரப்படுவது இல்லை.தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை.

அரசு ஊழியர் சங்கமாக மட்டுமில்லை நீங்கள், அரசியல் தெளிவு பெற்றவர்கள் நிரம்பிய சங்கமாகவும் இருக்கிற காரணத்தால் நான் இதற்கு மேல் தெளிவுபடுத்த அவசியமே கிடையாது. அளவு அறிந்து இந்த அரசு செயல்படுகிறது.ஈட்டுதல் அதிகமானதும் கொடுத்தல் அதிகம் ஆகும்.நிச்சயம் அதிகரித்து வழங்கப்படும். மக்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் இந்த அரசு இருக்கிறது என்பதைச் மீண்டும் உங்களிடத்திலே சொல்லி விடைபெறுகிறேன்”என்று நிறைவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

**வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *