சொத்துக் குவிப்பு வழக்கு: ஆகஸ்ட் 5ல் இறுதி விசாரணை!

Published On:

| By Balaji

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில், மூன்றாவது நீதிபதி முன் ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறவுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2011- 2013ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனது மனுவில் ”முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் அருகே, 66 கோடி ரூபாய் மதிப்பிலான 35 ஏக்கர் நிலத்தை 74 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகவும், திருத்தங்கல் பகுதியில் ரூ.23.33 லட்சத்துக்கு இரண்டு வீட்டு மனைகளும், ரூ. 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார். ஆனால் இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வருமானத்திற்கு அதிகமாக ராஜேந்திர பாலாஜி 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்தால் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், இந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை தேவை இல்லை. அதுபோன்று விசாரணையும் தொடர வேண்டியதில்லை என்று கூறி வழக்கை முடிக்க பொதுத்துறை உத்தரவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கில் கடந்த மார்ச் 4ஆம் தேதி, நீதிபதிகள் எம் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு தீர்ப்பு வழங்கியது.

நீதிபதி சத்யநாராயணன், ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கைப் பதிந்து விசாரிப்பது, செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போலாகும். மேற்கொண்டு விசாரித்தால் எந்தவிதப் பலனும் இருக்காது என்று கூறி இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.

நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பு சார்பிலும் வழக்குத் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு மீதான இறுதி வாதங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி நேரடியாக விசாரிப்பதாகக் கூறி நீதிபதி எம்.நிர்மல்குமார் வழக்கை ஒத்திவைத்தார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share