தடையில்லா ஆக்ஸிஜன்: மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்!

Published On:

| By Balaji

தென் ஆப்ரிக்காவிலிருந்து பரவிய ஒமிக்ரான் வைரஸ் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, சண்டிகர் என பல்வேறு மாநிலங்களிலும் பரவியுள்ளது.

ஒமிக்ரான் திரிபால் மூன்றாவது அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மீண்டும் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் ஏறத்தாழ 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ ஆக்ஸிஜன் சாதனங்களின் தயார் நிலை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று (டிசம்பர் 15) காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பெருந்தொற்றை சமாளிக்க, மருத்துவ ஆக்ஸிஜன் முக்கியமான பொருள், இதன் தடையற்ற விநியோகம் மிக முக்கியம் என குறிப்பிட்டார்.

மேலும் அவர், “ மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஆக்ஸிஜன் உற்பத்தி சாதனங்களின் செயல்பாட்டு நிலவரத்தைத் தினந்தோறும் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் .

நாட்டில் தற்போது 3,236 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மொத்த உற்பத்தித் திறன் 3783 மெட்ரிக் டன். இது தவிர 1,14,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் பிரதமர் நல நிதி மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 1374 மருத்துவமனைகளில் 958 திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சேமிப்பு டேங்குகள் மற்றும் பைப்லைன் வசதிகள் ஏற்படுத்தவும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை மாநிலங்கள் பயன்படுத்தி, ஆக்ஸிஜன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share