ரூ.2.27 கோடி லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுப்பணித் துறையின் வேலூர் தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் ஷோபனா. வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்கள் ஷோபனாவின் கட்டுப்பாட்டிலிருந்தது.
இந்த மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளின் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடுவது, நிதி ஒதுக்குவது, பணிகளை ஆய்வு செய்வது ஆகிய வேலைகளை செய்து வந்தார்.
இதில் டெண்டர் ஒதுக்குவதில் அவர் ஒப்பந்ததாரர்களிடம் அதிகம் லஞ்சம் வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டட ஒப்பந்ததாரர்களிடம் ஷோபனா வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார்கள் சென்றன.
இதையடுத்து கடந்த நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஷோபனா பணிபுரியும் வேலூர் அலுவலகம், ஓசூரில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் வேலூர் டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 2.27 கோடி ரூபாய் ரொக்கம், 38 பவுன் தங்க நகைகள், 1.3 கிலோ வெள்ளி பொருட்கள், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று காசோலைகள், 11 வங்கிக் கணக்கு புத்தகங்கள், அலுவலகம் தொடர்பான 15க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஷோபனா மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில் வேலூர் தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளராக இருந்த ஷோபனா திருச்சி வட்ட பொதுப்பணித்துறையில் கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துணை கண்காணிப்பு பொறியாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
லஞ்ச வழக்கில் சிக்கிய ஷோபனா மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுந்த நிலையில் அவர் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு ஓசூரில் இருக்கும் அவரது வீட்டில் தங்கிஇருந்தார் என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வு வழங்கியது ஏன்?. இதற்குப் பெயர்தான் ஊழலற்ற நிர்வாகமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த சூழலில், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு 26 நாட்களுக்குப் பிறகு நேற்று ஷோபனாவை போலீசார் விசாரணைக்காக ஓசூரிலிருந்து வேலூருக்கு அழைத்து வந்தனர். நேற்று 5 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், விசாரணைக்குப் பின் அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நேற்று இரவு அவரை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் செய்தனர். இதையடுத்து 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் ஷோபனா அடைக்கப்பட்டார்.
**-பிரியா**
�,