குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்தது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அமித் ஷா கடந்த 9ஆம் தேதி தாக்கல் செய்தார். பாஜகவுக்கு இருக்கும் பெரும்பான்மை காரணமாக அங்கு எளிதில் நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் குறைவு என்பதால் அங்கு நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், கடந்த 11ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 125 வாக்குகள் பெற்று நிறைவேறியது.
இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து சட்டத் திருத்த மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், அம்மசோதாவை அதிமுக ஆதரித்ததற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் சேலத்தில் இன்று (டிசம்பர் 18) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “குடியுரிமைச் சட்டம் குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டனர். இதனால் இந்தியாவிலுள்ள எந்த மதத்தினருக்கும் பாதிப்பும் கிடையாது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் இந்துக்கள், பார்சிக்கள், பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் தங்கினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது ஊடகத்தினர் அனைவருக்கும் தெரியும். தெரிந்தே திரும்பத் திரும்ப என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்” என்றவர்,
“இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என 2016ஆம் ஆண்டே பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார். நான் முதல்வரான பிறகு இதே கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவின் மீது மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி.க்கள், இதனை தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால், வேண்டுமென்ற திட்டமிட்டு ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். ஏதோ இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக துரோகம் இழைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார். இவையனைத்தும் முற்றிலும் பொய்.
இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் திமுகதான். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வது போல திமுக நாடகமாடுகிறது. தமிழர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் இலங்கை அரசைக் கண்டித்து ஏதேனும் போராட்டம் நடத்தினார்களா? 13 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோது திமுக இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத் தரவில்லை.இதற்கு ஸ்டாலின் பதில்சொல்ல வேண்டும். நாங்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கவில்லை என்றபோதிலும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்திவந்தோம். ஆனால், பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும்தான் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் திமுகவினர்தான்” என்று திமுகவை கடுமையாக சாடினார்.
தமிழர்களுக்கு கிடைக்கும் அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கு இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
மசோதாவுக்கு ஆதரவளித்தது தொடர்பாக அதிமுக எம்.பி பாலசுப்பிரமணியம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, “கொறடா சொன்னால்தான் ஓட்டுபோட வேண்டும். வேறு யார் சொன்னாலும் ஓட்டுப்போட வேண்டிய அவசியம் இல்லை. கட்சித் தலைமையிலிருந்து கொறடாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கொறடாவின் உத்தரவின் பேரில் வாக்களித்துள்ளனர்” என்று பதிலளித்தார்.
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்பீர்களா என்ற கேட்கப்பட, “இது எங்களது சொந்தப் பிரச்சினை. அதனை ஏன் நீங்கள் கிளறிக்கொண்டிருக்கிறீர்கள். எந்தக் கட்சியில் பிரச்சினை இல்லாமல் இருக்கிறது? குடும்பத்தில் 4 பேர் இருந்தாலே ஆளுக்கொரு எண்ணம் இருப்பது இயல்புதான். மிகப்பெரிய இயக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் கொறடாவின் உத்தரவுப்படி அனைவரும் நடப்பார்கள். அதிமுகவினர் அனைவரும் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்” என்று தெரிவித்தார்.
�,