அறிவாலயத்தில் நடந்தது என்ன?: தேம்பி தேம்பி அழுத அழகிரி

Published On:

| By Balaji

அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கண்ணீர் மல்கக் கூறினார். இதையடுத்து திமுகவுடனான கூட்டணி வேண்டாம் என்று பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள் ஓங்கிக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

திமுகவுடன் கூட்டணி பற்றி பேச முதலில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் சென்றனர். சில நிமிடங்களிலேயே பேச்சுவார்த்தை முடிந்து அவர்கள் புறப்பட்டனர்.

இதையடுத்து இரண்டாம் கட்டமாக கே.எஸ். அழகிரியும், ராமசாமியும் மட்டும் நான்கு நாட்கள் கழித்து அறிவாலயம் சென்றனர். அப்போது மேலிடப் பொறுப்பாளர்கள் வரவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர்கள் இனி வரமாட்டார்கள்” என்று பதிலளித்தார் கே.எஸ். அழகிரி.

இந்நிலையில் காங்கிரஸ் கேட்ட சீட்டுகளை விட மிகக் குறைவான சீட்டுகளே தருவதில் திமுக உறுதியாக இருந்ததால் நேற்று தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மாவட்டத் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கருத்துக் கேட்டார். அதுபற்றி மின்னம்பலத்தில் விரிவாக எழுதியிருக்கிறோம்.

அந்த கூட்டம் முடிந்து இன்று காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தினேஷ் குண்டுராவ், வீரப்ப மொய்லி ஆகியோர் பேசினார்கள்.

இதில் கடைசியாக பேசிய கே.எஸ். அழகிரி உடைந்து அழ ஆரம்பிக்க, அவருக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள் கரவொலி எழுப்பினார்கள்.

அப்படி என்னதான் பேசினார் அழகிரி?

“135 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறுகொண்ட தேசிய கட்சி காங்கிரஸ். கூட்டணியில் பிற கட்சிகள் இருக்கலாம். ஆனால் நூற்றாண்டு கண்ட தேசியக் கட்சிக்கென தேசிய அளவில் மரியாதையும், நம் கட்சியினருக்கு தனிப்பட்ட சுய மரியாதையும் உள்ளது.

கூட்டணியில் இடங்கள் கூடலாம், குறையலாம். ஆனால் கட்சியின் மரியாதையையும், கட்சிக்காரனின் மரியாதையையும் விட்டுக் கொடுத்துவிட முடியாது.

இந்த முறை அவர்கள் சொல்லும் எண்ணிக்கையில் இடங்கள் வாங்கினால் வரும் காலங்களிலே காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும் ஆபத்து உண்டாகிவிடும்.

நாம் கடந்த 15 ஆண்டுகளாக திமுகவோடு கூட்டணிக் கட்சியாக இல்லை… கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தோம். அவ்வளவு விட்டுக் கொடுத்து நடந்துகொண்டோம்.

ஆனால் நமக்கு அங்கே மரியாதை இல்லை. நமது உம்மன் சாண்டி தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்ற தேசிய தலைவர். அவருக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை.

நான் தலைவராக இருக்கும் காலத்தில் கட்சி பலமாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நான் என்னுடைய அனைத்து இயல்பான குணங்களையும் விட்டுவிட்டுத்தான் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் நம் தலைவர்களையும் என்னையும் அசிங்கப்படுத்திவிட்டார்கள்.

நாம் கேட்பதும் அவர்கள் தருவதும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது. நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கூட்டணியில் நின்ற கட்சி நமது காங்கிரஸ். பின் அறுபது, நாற்பது என ஆனது. இப்போது அவர்கள் சொல்லும் எண்ணிக்கையை நாம் ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ் கட்சி நாளைக்கு இல்லாமல் போய்விடும். அதற்கு நான் விடமாட்டேன்” என்று அழகிரி சொன்னதும் அனைத்து மாவட்டத் தலைவர்களும் எழுந்து நின்று, “மானம் கெட்டு கூட்டணி வேண்டாம். முடிவெடுக்க உங்களுக்கே அதிகாரம் தருகிறோம்” என்று குரல் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்ட திருநாவுக்கரசர், ஈவிகேஸ் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்களும் இறுக்கமான முகத்தோடு இருந்தார்கள்.

“இதற்கு மேல் காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை. அப்படி அமைந்தாலும் அது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கில்லை” என்கிறார்கள் நம்மிடம் பேசிய சில மாவட்டத் தலைவர்கள்.

**-ஆரா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share