மத்தியப் பிரதேசத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கர்நாடகா மற்றும் டெல்லிக்கு புதிய காங்கிரஸ் தலைவர்களை அக்கட்சி மேலிடம் இன்று (மார்ச் 11) நியமித்துள்ளது.
அண்மையில் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 60க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் டெபாசிட்டை இழந்தது. 2015ல் 9.7 சதவிகிதமாக இருந்த வாக்கு விகிதம் 2020ல் 4.27 சதவிகிதமாகக் குறைந்தது. இந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் சோப்ரா பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனில் சவுத்ரியைத் தலைவராக நியமித்துள்ளார். அபிஷேக் தத், சிவானி சோப்ரா, ஜெய்கிஷன், முடிட் அகர்வால், அலி ஹாசன் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவராக, முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவராக இருந்த தினேஷ் குண்டு ராவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது டி.கே.சிவக்குமார் கர்நாடக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சித்தராமையா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்து செயல்படுவார் என்றும் சட்டமன்ற உறுப்பினர்களான ஈஸ்வர் காண்ட்ரே, சதீஷ் ஜர்கிஹோலி, சலீம் அகமது ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உடனடி நடவடிக்கையாகக் கர்நாடக, டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
**கவிபிரியா**�,