சென்னை மாநகர காவல் துறை ஆணையராக இருக்கும் கூடுதல் டிஜிபியான சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி நேற்று (அக்டோபர் 18) டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று மீண்டும் சென்னை மாநகர ஆணையராகப் பணியைத் தொடர்கிறார்.
சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஆடம்பரத்தையும் விளம்பரத்தையும் விரும்பாதவர், பணியில் ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பவர் என்கிறார்கள் சென்னை காவல் துறையில்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் சென்னை மாநகர காவல் துறை ஆணையராகப் பொறுப்பேற்ற சங்கர் ஜிவால், கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தனது அலுவலகத்தில் இருந்தபோது திடீரென வியர்த்துக் கொட்டி, தோள்பட்டைகளில் கடுமையான வலி ஏற்பட்டதால் உடனே அலுவலகத்தில் உள்ள ஓய்வு அறைக்குச் சென்றுள்ளார். தனக்கு நெருக்கமான டாக்டரிடம் கைப்பேசியில் தொடர்புகொண்டு உடல்நிலையைப் பற்றித் தெரியப்படுத்தியுள்ளார். இதைக் கேட்ட டாக்டர் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு சொல்லியுள்ளார்.
இதையடுத்து தனக்கு நம்பிக்கையானவர்களிடம் மட்டும் சொல்லிவிட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார் ஆணையர் சங்கர் ஜிவால். அன்றே பிபி, இசிஜி, எக்கோ பார்த்துவிட்டு ஆஞ்சியோகிராம் செய்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்தவரை முதல்வர் ஸ்டாலின் நேரடியாகச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இரண்டு நாட்கள் பிறகு நேற்று முன்தினம் அக்டோபர் 17ஆம் தேதி, பூரண குணமடைந்து, மாலை சுமார் 6.30 மணியளவில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் செல்ல லிஃப்டில் கீழ்த்தளத்துக்கு வந்தவருக்கு அதிர்ச்சி,
காரணம், நான்கு ஜெ.சிக்கள், அனைத்து டி.சிக்கள் ஏ,சிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வரவேற்கக் கூடியிருந்தார்கள். சென்னை மாநகர போலீஸ் வரலாற்றில் ஆணையருக்கு உடம்பு சரியில்லை என்று இப்படித் திரளாக போலீஸார் வந்ததில்லை.
நெருக்கமான அதிகாரிகளிடம், “என்ன இவ்வளவு பேர்? யார் சொன்னாங்க? ஹார்ட் அட்டாக் பை பாஸ் செய்துட்டாங்கனு நியூஸ் பரப்பிவிட்டாங்களா?” என்று சிரித்தபடி கேட்டுள்ளார் சங்கர் ஜிவால்.
“யாரும் பிளான் பண்ணி வரலை சார். அவங்கவங்களே வந்துட்டாங்க” என்று சொல்லியிருக்கிறார் ஆணையருக்கு நெருக்கமான அந்த அதிகாரி.
பின் அவர்களிடம் பேசி அனுப்பிவிட்டு இரவு மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு மறுநாள் (அக்டோபர் 18) திங்கட்கிழமை டூயூட்டிக்குப் போக வேண்டும் என்று புறப்பட்டுவிட்டார். நேற்றுதான் அவருக்கு டிஜிபி பதவி உயர்வும் காத்திருந்தது. 11.00 மணியளவில் டிஜிபி பதவியேற்றுக் கொண்டு சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராகவே பணியைத் தொடர்கிறார் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்.
**-வணங்காமுடி**
�,