ஸ்லாமியர்கள் தங்கள் இறைத்தூதராக போற்றும் நபிகள் நாயகத்தை அவதூறு செய்ததாக பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா அக்கட்சித் தலைமையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் தங்கள் எதிர்ப்பை அதிகாரபூர்வமாகத் தெரிவித்தன.
இந்த நிலையில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாக சொல்லி உத்தரப்பிரதேசம், கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியை நேற்று (ஜூன் 7) இரவு கைது செய்திருக்கிறது காவல்துறை. பாஜக இளைஞர் பிரிவு தலைவர் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவாவை கான்பூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவருடைய சர்ச்சைக்குரிய ட்வீட் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ட்விட் இப்போது நீக்கப்பட்டுள்ளது.
“ஹர்ஷித் ஸ்ரீவத்சவா அவரது சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு காரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அமைதியைக் குலைப்பவர்கள் மத வேறுபாடின்றி நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். யாரும் தப்ப முடியாது” என கான்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே வன்முறை மோதல் வெடித்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பி, பின் தன் கட்சியால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மா தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். நுபுர் சர்மாவை இடை நீக்கம் செய்யும்போது பாஜக, “நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது” என்றும் கூறியது. இந்த நிலையில்தான் இன்னொரு பாஜக நிர்வாகி, அதேபோல அவதூறு கருத்து வெளியிட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
**வேந்தன்**