தொல்லியல் படிப்பில் தமிழ் இடம்பெறாதது தொடர்பாக மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய தொல்லியல் நிறுவனத்தின் தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதிகளில் சமஸ்கிருதம், பாலி உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்ற நிலையில், இந்தியாவில் தற்போது வரை வழக்கில் உள்ள செம்மொழியான தமிழ் அதில் புறக்கணிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மொழிகளும் அதில் சேர்க்கப்பட்டது.
இதனிடையே தொல்லியல் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமென வழக்கறிஞர் ரமேஷ் குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். தமிழையும் சேர்த்து புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென அதில் கோரியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி, “தமிழுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளித்துவருகிறது. தமிழை எப்போதும் புறக்கணிக்கவில்லை. தமிழ் மொழி உள்பட அனைத்துச் செம்மொழிகளையும் சேர்த்துப் புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார்.
இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், “தொல்லியல் துறை அறிவிப்பில் செம்மொழியான தமிழ் மொழி ஏன் முதலிலேயே இடம்பெறவில்லை. தொடர்ச்சியாக எதிர்ப்புகள் எழுந்தால்தான் சேர்க்கப்படுமா? மொழி என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்டது. மொழி விவகாரங்களை மத்திய அரசு எச்சரிக்கையுடனும் கவனமாகவும் கையாள வேண்டும். எதிர்ப்புகள் எழாவிட்டால் தமிழ் மொழி சேர்க்கப்பட்டிருக்குமா” என்று கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் மாநிலங்கள் மொழி அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டதே தவிர சாதி, மதம் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு மொழி முக்கியத்துவமானது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “தமிழைப் புறக்கணித்து அக்டோபர் 6ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டதற்கு யார் பொறுப்பு, அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, அரபு, பார்சி, பாலி மொழிகள் எந்த அடிப்படையில் அந்த பட்டியலில் இடம்பெற்றன. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பழமையான மொழிகள் எவை” என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
**எழில்**
�,