அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகளை இன்று (ஆகஸ்ட் 14) முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி 1972ல் சட்டம் கொண்டு வந்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில், இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருவதாகவும், 100 நாட்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜூன் 7ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
இதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தந்த மாவட்ட அறநிலையத் துறை ஆணையர்கள் சார்பில் தேர்வு நடத்தி பணி ஆணை தயார் செய்யப்பட்டது. இதில் தேர்வானவர்கள் அனைவரும் வேன் மூலம் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர். நேற்று மாலை, அறநிலையத் துறை தலைமை ஆணையர், தேர்வானவர்களின் சான்றிதழ்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துள்ளார்.
இன்று காலை 10 மணி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்பதால், காலை 8.30 மணியளவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் விழா, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், முதல்வர் கையால் பணி ஆணை கொடுக்கும் பட்டியலில் இடம்பெற்றிருந்த சிலர் மேடைக்கு வர தாமதமாக… முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு முதல்வர் தன் கையால் பணி ஆணை வழங்கினார். பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமனம் மற்றும் பணி நிரந்தர ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
இவர்கள், மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள், ஓதுவோர் உள்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் உட்படப் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
**-பிரியா**
�,