அரசியல் என்றால் வெள்ளை வேட்டி சட்டை உடுத்திக் கொண்டு கையெடுத்துக் கும்பிடுவது என்பது வெளியே நடத்தப்படுகிற ஒரு காட்சி. ஆனால் ஒரு தலைவன் அல்லது தலைவி இப்படி காட்சியளிப்பதற்குப் பின்னணியில் எத்தனை செயல் திட்டங்கள் உள்ளன, எத்தனை பாடுகள் உள்ளன என்பதெல்லாம் அரசியலின் ஆழ உயரம் புரிந்தவர்களுக்கே தெரியும்.
அந்த வகையில் இரண்டாவது வகையைச் சேர்ந்த பின்புலச் செயல்பாட்டு அரசியலில் பெயர் பெற்று, தான் சார்ந்த அமமுக கட்சிக்காகவே உயிரையும் கொடுத்துவிட்டார் அக்கட்சியின் பொருளாளரான புண்ணியகோடி வெற்றிவேல்.
தமிழகத்து அரசியலை விட சென்னை மாநகர கள அரசியல் வித்தியாசமானது. நேர்மறை அரசியல், எதிர்மறை அரசியல் இரண்டையுமே சென்னை மாநகரம் உச்சபட்சமாக பார்த்திருக்கிறது. இந்த இரண்டிலும் கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தவர் வெற்றிவேல்.
மூப்பனார், ஜெயலலிதா, சசிகலா,டிடிவி தினகரன் ஆகிய நான்கு தலைவர்களுக்கு பின்புலமாக இருந்து கடுமையாக உழைத்தவர் வெற்றிவேல். ஆனால் அதற்காக இவர் எந்த உயர்ந்தபட்ச பொறுப்புகளிலும் அமர்த்தப்படவில்லை.
1996 மூப்பனார் தமாகா என்ற தனிக்கட்சி கண்டு, டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நரசிம்மராவ் உருவ பொம்மையை சத்தியமூர்த்தி பவன் வாசலில் எரித்து தமிழகம் முழுதும் காங்கிரசாரை போராடத் தூண்டியவர்களில் முக்கியமானவர் வெற்றிவேல்.
மூப்பனாரின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தவர். இதன் பலனாக சென்னை மாநகராட்சியில் எதிர்க்கட்சித் தலைவரானார் வெற்றிவேல். அதுதான் சென்னையில் இவரது அரசியல் வளர்ச்சிக்கு பெரும் அடிக்கல் நாட்டியது. மூப்பனாரின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஐக்கியமானார்.இவரது வடசென்னை களப்பணிக்காக மாவட்டச் செயலாளர் பதவியும் அதிமுகவில் வழங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டில் சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளாராக போட்டியிட்டு வென்றார். ஆர்.கே.நகர் தொகுதியின் சந்து பொந்துகளிலெல்லாம் சென்று இங்கே இன்னார் இருக்கிறார் என்று சொல்லக் கூடியவர்கள் இருவர். ஒருவர் சேகர்பாபு, இன்னொருவர் வெற்றிவேல். அந்த அளவுக்கு தொகுதியை பற்றி விரல்நுனியில் வைத்திருந்தவர். ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்ட பின் மீண்டும் போட்டியிடுவதற்கு அவரது உடல் நலம் காரணமாக சென்னைக்குள்ளேயே சிறந்த தொகுதி தேடப்பட்டது. அப்போது ஜெயலலிதாவிடம் சென்று, ‘அம்மா… ஆர்.கே.நகர்ல போட்டியிடுங்கம்மா. அது நம்ம தொகுதிம்மா. சென்னையின் ஆண்டிப்பட்டிம்மா’ என்று வெற்றிவேல் சொல்ல உடனடி ஆய்வுக்குப் பின் ஆர்.கே.நகர் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் வெற்றிவேல். ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை வெல்ல வைப்பதிலும் சிறந்த களப்பணியாற்றினார். அதற்குரிய அரசியல் அங்கீகாரம் பெரிய அளவுக்கு வெற்றிவேலுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து உழைத்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே.நகரிலேயே நின்றதால், வெற்றிவேல் பெரம்பூர் எம்.எல்.ஏ.வானார்.
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது உடல்நிலை பற்றி டிசம்பர் வாக்கில் செய்திகள் வந்தபோது இதய அறுவை சிகிச்சைக்காக மதுரவாயல் அப்பலோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார் வெற்றிவேல். அதுவும் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில்தான் மருத்துவமனைக்கு சென்றார்.
ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி அறிவிக்கப்பட்டபோது அது வெற்றிவேலுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. அவரது உடல் நலம் கருதி மூன்று நாட்கள் கழித்துதான் தெரிவிக்கப்பட்டது. அப்போது கண்கலங்கினார் வெற்றிவேல்.
அடுத்த சில மாதங்களில் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை அடுத்து, சசிகலாவின் கூவத்தூர் ஆபரேஷன் தொடங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு வரை செயல்படுத்திக் காட்டியதில் வெற்றிவேலின் பங்கு முக்கியமானது. சசிகலா சிறைக்குச் சென்றபின்னர் வெற்றிவேலுடன் அதிக பாசம் காட்டினார் தினகரன். ஜெயலலிதாவை ஆர்.கே.நகரில் வெற்றிபெறவைத்தவர் என்பதால் தான் ஆர்.கே.நகரில் நிற்கும்போதும் வெற்றிவேலையே நம்பினார் தினகரன். அதேபோல அந்த ஆபரேஷனையும் வெற்றிகரமாக முடித்தார் வெற்றிவேல்.
சுயேச்சை வேட்பாளராக ஆர்.கே.நகரில் களமிறங்கிய தினகரன் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில சுற்றுகளிலேயே வெற்றியை நோக்கி முன்னேற…அடுத்த சில நிமிடங்களில் வெற்றிவேலுக்கு போன் போட்டு, ‘என்ன சிங்கம்…’ என்று தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார். இதை தனக்கு நெருக்கமான பத்திரிகை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் வெற்றிவேல்.
ஜெயலலிதாவுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, அவர் மறைவுக்குப் பின் ஆட்சியை நிலை நிறுத்துவதில் பெரும் பங்காற்றிய வெற்றிவேல், அதே ஆட்சியால் பெரம்பூர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யபப்ட்டார். ஆனபோதும் சசிகலா, தினகரன் பின்னாலேயே அணி வகுத்தார்.
கொரோனாவின் கொடூர மாதங்களில் மார்ச், ஏப்ரல், ஜூன் காலகட்டத்தில் மாமல்லபுரத்தில் ரிசார்ட்டில் தங்கி, தன் அரசியல் வாழ்வில் இப்படி காணக் கிடைக்காத விடுப்பை அனுபவித்துக் கொண்டிருந்தார் வெற்றிவேல். கட்சியினர் யாரையும் சந்திக்காத வெற்றிவேல், தன்னிடம் உதவி என்று கேட்ட லோக்கல் பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் பலரிடமும், ‘பேங்க் அக்கவுண்ட் நம்பர் கொடுய்யா… நான் போட்டுவிடறேன்’ என்று சொல்லி அதன்படியே பணம் செலுத்தி உதவியிருக்கிறார்.
கடந்த இடைத்தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்தாலும், தான் ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என்றமுறையில் பெரம்பூர் தொகுதிக்கு மட்டும் சுமார் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கான நலத்திட்ட உதவிகளை கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்துகொண்டிருந்தார் வெற்றிவேல். மளிகைப் பொருட்கள், நிதியுதவி, காய்கறி என எல்லாம் சேர்த்து சுமார் இரு கோடி ரூபாய்களை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு மட்டுமே செய்திருக்கிறார்.
உடல் எடை குறைப்பு சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை என ஏற்கனவே சில உடல் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருந்த வெற்றிவேல்.. மிக கவனமாகவே இருந்து வந்தார். ஆனால் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அமமுகவின் தலைமை அலுவலகத்தில் மண்டலரீதியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்த திட்டமிட்ட டிடிவி தினகரன், அதில் தான் கலந்துகொள்ளாமல் வெற்றிவேலையே கவனிக்க சொன்னார்.
‘சார்… வீடியோ கான்பிரன்ஸிலயே சூம்ல போட்டுடலாமே சார்’ என்று வெற்றிவேல் யோசனை தெரிவிக்க இல்லங்க நேர்லயே போட்டுடலாம் என்ற தினகரனின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அமமுக அலுவலகத்துக்கு வந்து மாவட்ட செயலாளர்களை சந்தித்து கூட்டம் நடத்தினார் வெற்றிவேல்.
மூன்று தினங்கள் தொடர்ந்து பல மாவட்ட நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்தித்த நிலையில்தான் அடுத்த சில நாட்களில் காய்ச்சல் என லேசான அறிகுறி எட்டிப் பார்த்திருக்கிறது வெற்றிவேலுக்கு.
‘இந்த புது ஆபீசே எங்களுக்கு சென்டிமென்ட்டா சரியில்லை சார்” என்று அமமுகவினர் அன்று புலம்பியதை மின்னம்பலத்தில் பகிர்ந்திருந்தோம். அமமுகவினரின் சென்டிமென் ட்டை உரசிப் பார்க்கும் வகையில் அந்த அலுவலகத்தில் நடந்த நிகழ்வைஅடுத்து ஏற்பட்ட கொரோனா தொற்று வெற்றிவேல் என்னும் களச் செயல்பாட்டாளரை கவ்விக் கொண்டு போய்விட்டது.
கட்சிக்காக பதவியையும் பறிகொடுத்து உயிரையும் பறிகொடுத்துவிட்டார் வெற்றிவேல்.
**ஆரா**�,