இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜகவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குத் தனது வெறுப்பு பேச்சுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பயன்படுத்துவதில்லை என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட செய்திதான், இன்று இந்திய அரசியலை சூடாக்கிக் கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான இந்தக் கட்டுரையை மேற்கோளிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 15ஆம் தேதி, “இந்தியாவில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பைக் கட்டுப்படுத்துகின்றன. அவர்கள் அதன் மூலம் போலி செய்திகளையும் வெறுப்பையும் பரப்பி வாக்காளர்களை பாதிக்க அதைப் பயன்படுத்துகிறார்கள். இறுதியாக, அமெரிக்க ஊடகங்கள் ஃபேஸ்புக் குறித்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளன” என்று ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு உடனடியாக பாஜகவின் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் கொடுத்தார். தங்கள் சொந்தக் கட்சியில் இருப்பவர்கள் மீதே செல்வாக்கு செலுத்த முடியாதவர்கள், முழு உலகமும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்று கூச்சலிடுகிறார்கள். தேர்தலுக்கு முன்னர் தரவுகளுக்காக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் ஃபேஸ்புக் உடனான கூட்டணி வைத்தபோதே ராகுலை அனைவருக்கும் தெரியும். இப்போது எங்களை கேள்விக்குட்படுத்த வேண்டுமா?” என்று பதிலில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் ரவிசங்கர் பிரசாத்.
பாஜகவைச் சேர்ந்தவர்களின் மீறல்களைத் தண்டிப்பதால் இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வணிக வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்பதால், அவற்றை கண்டுகொள்ள வேண்டாம் என ஃபேஸ்புக்கின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. ஃபேஸ்புக் பாஜகவுக்கு பரந்த ஆதரவைக் கொடுத்துவருகிறது என்றும் அக்கட்டுரை கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
**-வேந்தன்**
�,”