eரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்: நாசர்

Published On:

| By admin

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று(ஏப்ரல் 13) பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடைத் துறைகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த பால்வளத் துறை அமைச்சர் நாசர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பால் கையாளும் வகையில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை 150 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கத்தில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுடைய பால் பண்ணை 71.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பண்ணை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தூய பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 50 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பண்ணை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கூட்டுறவுச் சங்கங்களின் மேம்பாடு மற்றும் உறுப்பினர்களின் நலன் கருதி 461 தானியங்கி பால் சேகரிப்பு அலகுகள் மற்றும் 303 செயலாக்கத் தரவு பால் சேகரிப்பு அலகுகள் 8.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட பால் பண்ணை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

சேலம் மாவட்டம் கருமந்துறையில் உயர் மரபியல் திறனுள்ள கிடேரி கன்றுகள் வளர்க்கும் திட்டம் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழான நிதி உதவியுடன் சொந்த அடிமனை கொண்டுள்ள 50 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகங்கள் கட்டித்தரப்படும்.

காஞ்சிபுரம்-திருவள்ளூர், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் சில்லறை விற்பனையாளர்களின் பங்களிப்புடன் விற்பனையை ஊக்குவித்து அதிகரிக்கும் வகையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சந்தைப்படுத்தும் செயல்பாடுகள் வலுப்படுத்தப்படும்.

ஈரோடு கால்நடை தீவன தொழிற்சாலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

திருவண்ணாமலை இணையப் பால்பண்ணையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் 120 மகளிர் பால் உற்பத்தியாளர்களுக்குச் சாண எரிவாயு கலன்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னோடி திட்ட அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

செயற்கை முறை கருவூட்டல் வசதிகளை வலுப்படுத்த 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 திரவ நைட்ரஜன் கொள்கலன்கள் 78 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

பிரதம பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் இணையத்தில் பணியாற்றும் அலுவலர்களின் திறனை மேம்படுத்துவதற்காக மாதவரத்தில் 100 நபர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி 50 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

பால் கொள்முதல் பதப்படுத்துதல் மற்றும் விற்பனை பணிகளைக் கணினி மயமாக்கும் திட்டம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு கறவைகளுக்கான பசுந்தீவன உற்பத்தியினை மேம்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நவீன திட்டம் 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

கறவைப் பசுக்களின் இன விருத்தியை அதிகரிக்கும் வகையில் உதகமண்டலம் ஜெர்சி பொலிகாளை பண்ணைக்கு 120 ஜெர்ஸி கலப்பின காலை கன்றுகள் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

பால் பண்ணைகளில் நுகர்வோர் நலன் கருதி ஒருங்கிணைந்த தரச்சான்று பெற 25 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

தமிழ்மொழி கல்வியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பால் உற்பத்தியாளர்களின் வாரிசுகள் பரிசு தொகை வழங்கி ஊக்குவிக்கப்படுவார்கள். முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் ,இரண்டாம் பரிசாக 5000 ரூபாயும் ,மூன்றாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

வேலூர், திருவண்ணாமலை, மதுரை மற்றும் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு நடமாடும் பால் கறவை இயந்திரங்கள் 20 எண்ணிக்கையில் 13 லட்சம் மதிப்பீட்டில் முன்னோடி திட்டமாக வழங்கப்படும்.

ஆவின் நிறுவனத்தின் நீண்டகால நுகர்வோர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

நுகர்வோரின் தேவையைக் கருதி 10 வகையான புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி ஆவின் ஹெல்த் மிக்ஸ், குளிர்ந்த காபி, பாலாடைக்கட்டி, பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாஸந்தி, ஆவின் பால் பிஸ்கட், அடுமனை யோகர்ட், ஆவின் வெண்ணெய் முறுக்கு, வெள்ளை சாக்லேட் ஆகியவை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு விசுவாசத்துடன் தொடர்ந்து பால் வழங்கி வரும் பால் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களைப் பாராட்டும் வகையில் ஒவ்வொரு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திலிருந்தும் தலா மூன்று சிறந்த பால் உற்பத்தியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 5ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசாக 3ஆயிரம் ரூபாய் என 5 லட்சம் ரூபாய் செலவில் பரிசுத் தொகைகள் வழங்கப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி அவர்களுக்கான பணப்பட்டுவாடா முறை தாமதமின்றி வழங்கிட ஒன்றுபட்ட பணப்பட்டுவாடா முறை நடைமுறைப்படுத்தப்படும்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டுச் செயல்படுத்தப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி பால் உற்பத்தியாளர்களுக்கு அனைத்து இறப்புகளுக்கும் இறுதிச் சடங்கு செலவுத் தொகை 5,000 ரூபாய் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் பால்வள மேம்பாடு மற்றும் ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான பால் கொள்முதல் பதப்படுத்துதல் மற்றும் விற்பனை போன்ற செயல்பாடுகளுக்கான குறுகிய கால இடைக்கால மற்றும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டு ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்கள் NCDFI மற்றும் TRMA மூலமாகச் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share