அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும், தற்போது ரவுடிகள் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மணிகண்டனைக் கைது செய்ய, நான்கு தனிப்படைகள் நேற்று முன்தினம் காலை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு விரைந்தன.
இதில் பெங்களூருவில் தனது நண்பரது பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த மணிகண்டனை, இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று (ஜூன் 20) கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
மணிகண்டனை அடையாறு காவல் நிலையத்தில் வைத்து இரண்டு மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது 376 சட்டப்பிரிவின் (பாலியல் வன்கொடுமை) கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லாது . இருவரும் விருப்பத்துடன் பழகி உள்ளதால் பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே வழக்கை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
**-பிரியா**
�,