முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், சட்டமன்றத்தைக் கலைக்க ஸ்டாலின் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகிய 5 பேரின் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் 6ஆவது அமைச்சராக முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோட அள்ளியில் உள்ள கே.பி.அன்பழகனின் வீடு, அருகிலுள்ள பூலாப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அவரது மகள் வித்யா ரவிசங்கர் வீடு, பெரியாம்பட்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் இயங்கும் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் அதிமுகவினர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சோதனை நடத்துவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவினர் மீது ஒரு செயற்கையான தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இந்த சோதனையை நடத்துகின்றனர். இது ஒரு பழிவாங்கும் செயல்.
பொங்கல் பண்டிகைக்கு 21 பொருட்கள் கொடுத்தனர். இது தரமற்றவையாக இருந்ததால் பல இடங்களில் மக்கள் சாலைகளில் கொட்டினார்கள். குப்பைகளாக 21 பொருட்களைக் கொடுத்தார்கள்.
இதைத் திசை திருப்ப வேண்டும், இதனை மறக்கடிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று நடந்துகொள்வதால் அதிமுகவினர் மீது களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்கள்.
திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலினுக்குத் திராணி இருந்தால் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தத் தயாரா? அப்படி நடத்தினால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த 8 மாதத்தில் மக்கள் மத்தியில் அதிருப்தியைச் சந்தித்துள்ளார்கள்.
எத்தனையோ சோதனைகளை எல்லாம் அதிமுக சந்தித்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் சோதனைக்கு வாருங்கள்… அதை பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட போவதில்லை” என்று கூறினார்.
**-பிரியா**
�,