சுகாதாரத் துறைச் செயலாளர் மாற்றப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்துள்ள சூழலில் சுகாதாரத் துறைச் செயலாளராக பணியாற்றி வந்த பீலா ராஜேஷ் நேற்று திடீரென வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சுகாதாரத் துறைச் செயலாளராக 7 ஆண்டுகள் வரை பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மீண்டும் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றன.
சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்தார். கொரோனா காலத்தில் சிறந்த தலைமையாக செயல்பட்டவர், பல மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த காரணமானவர் என்றும் அவர் புகழ்ந்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 13) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுதொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், “பீலா ராஜேஷ் மாற்றத்தில் வேறு எந்த காரணமும் இல்லை. அவர் மாற்றப்பட்டது முழுக்க முழுக்க நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைதான்” என்று விளக்கம் அளித்தார்.
மேலும், “முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய 3 விஷயங்களை பின்பற்றினால் கொரோனா வைரஸ் வர வாய்ப்பில்லை. கொரோனாவில் யார் அரசியல் செய்தாலும், அவர்கள் மக்களால் தனிமைப்படுத்தப்படுவார்கள். சூழலை பொறுத்து உரிய நேரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார்” என்றும் ஜெயக்குமார் தனது பேட்டியில் கூறினார்.
**எழில்**�,