pநெடுஞ்சாலைத் துறை அறிவிப்புகள் என்னென்ன?

Published On:

| By admin

தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 12) நெடுஞ்சாலைத் துறை சார்பில் 18 அறிவிப்புகளை வெளியிட்டார் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு.

அந்த அறிவிப்பில், “செங்கல்பட்டு நகரத்தைத் திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை வழியாகத் தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக சாலையை நான்கு வழித்தட சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை 4 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்படும்.

கோவை, பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர் காரியபட்டி வழியாகத் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் தொழிற்தட துறைமுக சாலையை நான்கு வழி சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 150 கிலோ மீட்டர் சாலைகளை நான்கு வழித்தடமாகவும், 600 கிலோ மீட்டர் சாலைகளை இரு வழித்தடமாகவும் ரூபாய் 2300 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வண்ணம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை 485 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.

கலங்கரை விளக்கம் முதல் கிண்டிவரை உயர்மட்ட சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

பெரிய தெற்கத்திய சாலையில் OTA அருகே மேம்பாலம் மற்றும் கோயம்பேடு நடைமேம்பாலம் அமைக்க 25 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

சென்னை பெருநகர பகுதியில் பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் 322 கோடி ரூபாய் மதிப்பிலும், பாடி மேம்பாலம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அகலப்படுத்துதல் பணி 100 கோடி ரூபாய் மதிப்பிலும், தாம்பரம் சண்முகம் சாலை அருகே இணைப்பு சாலை 10 கோடி ரூபாய் மதிப்பிலும் மேற்கொள்ளப்படும்.

சென்னை மாநகரப் பகுதியில் உள்வட்டச் சாலையில் செந்தில் நகர் சந்திப்பு, டெம்பிள் பள்ளி சந்திப்பு, கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் 50 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.

ரயில்வே மேம்பாலங்கள் 8 மாவட்டங்களில் 12 இடங்களில் ரூ.577.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்ட ஏழு இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் சாலை பாதுகாப்பினை மேம்படுத்தவும் கோவை மாநகர், மேற்கு வட்ட சாலை பகுதி 1, திருச்செங்கோடு நகருக்கு மற்றும் திருவண்ணாமலை நகருக்குப் புறவழிச்சாலை 500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.

ஈரோடு நகருக்கு கிழக்கில் மற்றும் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் நகருக்குப் புறவழிச்சாலை அமைக்க முதற்கட்டமாக 40 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

அனைத்துக் கால நிலைகளிலும் தங்குதடையற்ற போக்குவரத்து என்ற முதலமைச்சரின் முத்தாய்ப்பான திட்டத்தின் கீழ் 435 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக 1105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப்பாலங்கள் 146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

உதகமண்டலம் நகருக்கு மாற்றுப்பாதை 70 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் பக்தர்கள் பாதயாத்திரை செல்ல நடைபாதை மற்றும் கோவில் கிரிவலப் பாதை போன்ற பணிகள் 35 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.41.75 கோடி மதிப்பில் மீனவர் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க சுவர் கட்டப்படும். மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை படி கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 47 கிராமங்களை இணைக்கும் புதிய இணைப்பு சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை 75 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்படும்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பசுமலையில் புதிய சாலை ரூ.26.33 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

வேலூர் சிஎம்சி எதிரில் சுரங்கப்பாதை மற்றும் கரூர் பேருந்து நிலையத்தில் நடை மேம்பாலம் அமைக்க 25 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலமாக 400 கிலோ மீட்டர் நீள முக்கிய மாநில சாலைகளை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டு நிதி நிறுவன கடன் உதவி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு கடல்சார் வாரியம் மூலம் படகு போக்குவரத்தை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ராமேஸ்வரத்தில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் தரத்தை நவீன வசதிகளுடன் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share