மாற்றான் தோட்டத்து மல்லிகைகளுக்கே மரியாதை- குமுறும் தாமரைகள்!

Published On:

| By Balaji

தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் பதவிக்கு வந்த மூன்று மாதங்கள் கழித்து, கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பட்டியல் தமிழ்நாடு பாஜக பற்றி பல செய்திகளை சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

பாஜக என்றாலே பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, வானதி என்ற பெயர்களே நினைவுக்கு வந்துகொண்டிருந்த நிலையில் இந்த சீனியர்களின் தயவு துளியும் இன்றி புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வெளியிட்டிருக்கிறார் முருகன். ஆக தமிழக பாஜகவில் சீனியர்கள் கோலோச்சிய காலம் போய், புதியவர்களின் கைக்கு வந்திருக்கிறது தமிழக தாமரை என்கிறார்கள் இந்தப் பட்டியலை உற்று நோக்கும் பாஜகவினர். அதேநேரம் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கே மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது, தாமரைக் கொடியை பிடித்து ஆண்டாண்டு காலமாக கட்சியிலே இருப்பவர்கள் கவனிக்கப்படவே இல்லை என்ற குமுறலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

**ஓரங்கட்டப்பட்ட சீனியர்கள்!**

தமிழக பாஜகவின் இந்த புதிய நிர்வாகிகள் பட்டியலில் சீனியர்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட்டு, முருகன் தனது தோதுக்கு ஏற்றவர்களை வைத்து நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துள்ளார். பாஜகவை பொறுத்தவரை பொதுச் செயலாளர் பதவிதான் முக்கியமானது. மாநிலக் கட்சியின் கோர் கமிட்டி எனப்படும் மையக் குழுவில் தலைவர், பொதுச் செயலாளர்கள், அமைப்புப் பொதுச் செயலாளர் ஆகியோருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும், அந்த வகையில் இதுவரை பொதுச் செயலாளர் என்ற முக்கியமான பதவியில் இருந்த வானதி சீனிவாசன், துணைத் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் துணைத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். வானதி பொன். ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் என்பது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். பொன்.ராதாகிருஷ்ணனின் இன்னொரு தீவிர ஆதரவாளரான கருப்பு முருகானந்தம் மாநிலப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மாநிலச் செயலாளராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

**மதுரைக்கு முக்கியத்துவம்**

அதேநேரம் இதுவரை மாநில செயலாளர்களாக இருந்த கே.டி. ராகவன், மதுரை சீனிவாசன் ஆகியோருக்கு பொதுச் செயலாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை சீனிவாசன் மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி விவாதங்களில் மட்டுமல்லாமல் முரசொலி சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவருக்கு பொதுச் செயலாளர் அங்கீகாரம் அளிக்கப்பட்டதன் மூலம் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாஜகவை வலுப்படுத்த நினைக்கிறார் முருகன்.

கோவை பகுதியைச் சேர்ந்த ஜி.கே. செல்வகுமாரின் நியமனம் கட்சியினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சமகவில் இருந்து சில ஆண்டுகள் முன் வந்து சேர்ந்த கரு. நாகராஜன் வெகு சீக்கிரமே முக்கியப் பதவியான பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

**பெண் செயலாளர்கள்**

மாநில செயலாளர்கள் வரிசையில் கன்னியாகுமரி உமாரதி, திருப்பூர் மலர்க்கொடி, வேலூர் முன்னாள் மேயர் கார்த்திகாயினி, திருச்சி பார்வதி நடராஜன், சென்னை சுமதி வெங்கடேஷ் ஆகிய ஐந்து பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தகுந்த நடவடிக்கை.

தமிழிசை, வானதி வரிசையில் மேலும் பல பெண்களுக்கான வாய்ப்பாக இந்த பட்டியல் பார்க்கப்படுகிறது.

**அணியைத் தக்க வைத்துக் கொண்ட இளைஞர்கள்!**

அணிகளில் இளைஞரணி வினோஜ், ஊடகப் பிரிவின் ஏ.என்.எஸ். பிரசாத் உள்ளிட்ட சிலர் மீண்டும் அணிகளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞரணியின் மாநிலத் தலைவர் வினோஜிடம் இதுகுறித்து கேட்டபோது, “தமிழகத்தில் இளைஞர்களை பாஜகவுக்குக் கொண்டுவரும் முயற்சி தொடரவேண்டும் என்பதற்காக இரண்டாம் முறையாக என்னை நியமித்திருக்கிறது தலைமை. இன்னும் துடிப்பாக செயல்படுவோம். திமுகவை போல பாஜக குடும்பக் கட்சி அல்ல. இங்கே உழைப்புக்கு மரியாதை தரப்படுகிறது. குறிப்பாக இளைஞரணி தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டது பாஜகவில் அண்மையில் நடைபெறாதது. அதற்காக தமிழக பாஜக தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்கள் ஒற்றை இலக்கு” என்றார்.

**மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தால்தான் மரியாதையா?**

தமிழக பாஜகவில் காலங்காலமாக உழைத்து வருபவர்களுக்கு மரியாதை இல்லை என்ற புலம்பலும் இம்முறை அதிகமாகவே கேட்கிறது. நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகிகள் சிலர், “தமிழ்நாடு பாஜகவில் தாமரைக் கொடி பிடித்துக் கொண்டு வீதி வீதியாய் சென்று ஓட்டுக் கேட்டவர்கள், பிரச்சாரம் செய்தவர்கள், உறுப்பினர் சேர்த்தவர்களுக்கு பதவி கிடையாது. மாற்றுக் கட்சியில் இருந்து வந்தால் உடனே பதவி கொடுத்துவிடுகிறார்கள். திமுகவில் இருந்து வந்த வி.பி. துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி. அதிமுகவில் இருந்து வந்த நயினார் நாகேந்திரனுக்கு துணைத் தலைவர் பதவி, சரத்குமாரிடம் இருந்து வந்த கரு. நாகராஜனுக்கு பொதுச் செயலாளர் பதவி, தனிக்கட்சி நடத்தி வந்து சில நாட்களுக்கு முன் பாஜகவில் இணைந்த பால்கனராஜுக்கு வழக்கறிஞர் அணி தலைவர் பதவி. ஜி.கே. நாகராஜுக்கு விவசாய அணி தலைவர் பதவி என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் வேறு கட்சிக்கு சென்று வந்தால்தான் பாஜகவில் பதவி கிடைக்கும்போல” என்கிறார்கள்.

கமலாலயத்தின் இந்த புதிய பட்டியலில் முருகனுக்கு நெருக்கமானவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். நேற்றைக்கு வந்த மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் எல்லாம் பதவி பெறும்போது, காலங்காலமாய் உழைத்துக் கொண்டிருக்கும் தாமரைகள் வாடிக் கொண்டிருக்கின்றன என்பதே கமலாலய கள நிலவரம்.

**-ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share