2022ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 5) தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து அதிமுக, விசிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் உரையாற்றி முடித்ததும் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையைத் தமிழில் மொழிபெயர்த்தார். இதன் பின்னர் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு 2 நாட்கள் மட்டும் பேரவையை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “அலுவல் ஆய்வுக் குழுவில் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டனர். இதில், நாளை (இன்று) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஆரம்பிக்கப்பட்டு விவாதம் நடைபெறும். நாளை மறுநாள் (நாளை) முதல்வரின் நிறைவுரையுடன் சட்டப்பேரவை நிறைவு பெறும். இந்த இரண்டு நாட்கள்தான் சட்டப்பேரவை நடைபெறும்.
வினாக்கள், விடையுடன் சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும். இதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். முதல்வரின் உரையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதுதான் நோக்கம். ஆனால் சோதனை முறையில் நாளை(இன்று) ஒளிபரப்பு செய்யப்படும்” என்றார்.
மேலும் ஆளுநர் ஜெய் ஹிந்த் என்று உரையை முடித்து இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், “அதில் என்ன தவறு உள்ளது. இந்தியா வாழ்க என்று சொன்னால் குற்றமா? நான் கூட நன்றி, வணக்கம் சொன்னேன். பாரதியார் பாடலிலேயே பாரத நாட்டுக்கு நன்றி தெரிவித்து விட்டோமே. நாம் எல்லோரும் இந்தியர்கள் இதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழன் என்பது அடையாளம். இதில் தவறு இல்லையே. ’ஜெய்ஹிந்த்’ யாரும் பேசவே கூடாது என்று யாரும் சட்டம் போடவில்லையே” என்று கூறினார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து இரண்டு நாட்கள் மட்டும் பேரவை கூட்டத்தொடர் நடத்த முடிவெடுத்தோம் எனவும் குறிப்பிட்டார்.
கொரோனா பாதிப்பால் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**�,