நீங்கள் பணியாற்றி கொண்டிருக்கும் இடத்தில் உள்ள ஆதிக்க கலாச்சாரத்தை என்னால் முழுமையாக தகர்த்தெறிய முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னையிலுள்ள வீட்டை காலி செய்த நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பிரிவு உபசார விழாவை தவிர்த்து விட்டு இன்று(நவம்பர் 17) சென்னையிலிருந்து சாலை வழியாக காரில் குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். ஆனால், மேற்குவங்கத்துக்கு செல்கிறாரா அல்லது பணியிட மாற்றம் செய்யப்பட்ட மேகலாயா உயர் நீதிமன்றத்துக்கு செல்கிறாரா என்ற விவரம் தெரியவில்லை.
இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தன்னுடைய சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,பதிவாளர் மற்றும் ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். “சென்னை உயர்நீதிமன்ற எனது குடும்ப உறுப்பினர்களுக்கு” என்று கடிதம் தொடங்குகிறது.
அதில், “ **எனது சக நீதிபதிகளுக்கு**: முதலில், இறுதி நிமிடம்வரை உங்களுடன் இல்லாததற்கும், இரண்டாவதாக உங்கள் ஒவ்வொருவரையும் நேருக்கு நேர் சந்தித்து சொல்லாமல் விடைபெற்றதற்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு சிலரை எனது நடவடிக்கைகள், செயல்கள் புண்படுத்தி இருந்தால் அதற்காகவும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவை தனிப்பட்ட முறையில் ஆனது இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது நீதிமன்றத்தின் நலனுக்காக எடுக்கப்பட்டது. ராணி மற்றும் என் மீது நீங்கள் காட்டிய அளவு கடந்த அன்பினால் நான் நெகிழ்ந்துபோனேன்” என்று கூறினார்.
**சென்னை வழக்கறிஞர் பார் உறுப்பினர்களுக்கு**: நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்ற
வழக்கறிஞர்கள்தான் சிறப்பானவர்கள். அதிகம் பேசக் கூடிய நேரத்திலும், எரிச்சல்படுத்தும் விதமாக நடந்துக் கொள்ளும் நேரத்திலும் அதிக பொறுமையுடன், புரிதலுடனும், மரியாதையாக நடந்து கொண்டீர்கள். எனக்கு அதிகமாகவே மரியாதை கொடுத்தீர்கள். உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
**எனது பதிவாளருக்கு**: உங்களின் செயல்திறன் நீதிமன்றத்தின் நிர்வாகத்தை எளிதாக்கியது. நீதித் துறையின் நடைமுறைகளை மேம்படுத்துவதில் எந்தளவுக்கு நீங்கள் நேர்மையாக
நடந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். நீதித் துறையின் வெளிப்படைத்தன்மை மற்றும்
பொறுப்புடைமையை காக்க, தொடர்ந்து இதே முறையில் செயல்படுங்கள்” என்றார்.
**நீதிமன்ற ஊழியர்களுக்கு**: உங்கள் அனைவரையும் அதிக நேரம் எனக்காக காக்க வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் முழுமையான ஒத்துழைப்புக்கு பாராட்டுகிறேன். நீங்கள் பணியாற்றி கொண்டிருக்கும் இடத்தில் உள்ள ஆதிக்க கலாச்சாரத்தை என்னால் முழுமையாக தகர்த்தெறிய முடியவில்லை என்பதற்காக மிகவும் வருந்துகிறேன்” என்று கூறினார்.
இறுதியாக, இந்த அழகான மற்றும் போற்றத்தக்க மாநில மக்களுக்கு நானும், ராணியும் எப்போதும் நன்றி கடன் பட்டிருப்போம். எனது சொந்த மாநிலம் என்று சொல்லி கொள்ளும் அளவுக்கு நான் பணியாற்றிய கடந்த 11 மாதங்களும் நீங்கள் காட்டிய அன்புக்கும், மரியாதைக்கும் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன். அந்த மகிழ்ச்சியான நினைவுகளுடன் நாங்கள் விடைபெறுகிறோம்” என்று கடிதம் முடிகிறது.
**-வினிதா**
�,